காவேரி மருத்துவமனைக் கதவுகளுக்குப் பின் ததும்பும் பிரியம்!

``தலைவர் நிறைய பண்ணியிருக்கார். 14 வருஷம் முந்தி என் பேத்திக்கு ஒரு பிரச்னை. தி.மு.க-காரவுங்களவிட்டுதான் அதை சரிபண்ணார். கோபாலபுரத்துக்கு வந்து மனு கொடுத்ததும், உடனே சரிபண்ணார்” என்று மறுபடி உணர்ச்சிமயமானார்.

காவேரி மருத்துவமனைக் கதவுகளுக்குப் பின் ததும்பும் பிரியம்!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிகப் பின்னடைவு ஏற்பட்டு, தகுந்த மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சீரடைந்ததாக 29-ம் தேதி அறிக்கை வெளியிட்டது காவேரி மருத்துவமனை நிர்வாகம். அன்று இரவு முதல் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியது கருணாநிதியின் அன்புக் கூட்டம். இன்று வரை மருத்துவமனையைச் சுற்றி இருக்கும் இடங்களையே வசிப்பிடமாக மாற்றிக்கொண்டிருக்கும் சிலரிடம் பேசினேன்.

பரம கொள்கைக்காரர்கள் மட்டுமல்ல, கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள், அவரது பேச்சுக்கான ரசிகர்கள், `அரசியலே சாக்கடை' என நழுவும் இளைஞர்கள், முரண்பட்டாலும் அவரது ஆளுமையை ரசிப்பவர்கள், தன் வீட்டில் பெரியவரை கால்மாட்டில் நின்று கவனித்துக்கொள்ளும் உணர்வை உடையவர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் கூட்டம் அது.

காவேரி மருத்துவமனை

29-ம் தேதி, இரவு 12:30 மணி:

அதீத பயத்தின் காரணமாகவோ, மற்றவர்களுக்குப் பதற்றத்தைக் கடத்தி அதன்மூலம் அடையும் அற்ப மிதப்பின் காரணமாகவோ மருத்துவமனைக்கு வெளியே வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன. மறுபுறம், கட்சித் தொண்டர்கள் குழுவாக நின்று, ``கலைஞர் நன்றாக இருக்கிறார். வதந்தி பரப்பாதீர்கள்!'' என்று சொல்லிக்கொண்டிருந்தனர். மருத்துவமனைக்கு எதிரில் சாலையோரம் அமைதியாக அமர்ந்து, இமைக்காமல் கண்ணீர் வடித்த ஒருவரிடம்,

``ஐயா உங்க பேரு?'' என்றேன்.

``உங்களுக்காச்சும் என்னாச்சுன்னு தெரியுமா... ஏதேதோ சொல்றாங்களே!” என்ற அவரை ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்ததும் பேசத் தொடங்கினார். ``என் பேரு கருணாநிதி. கடலூர் மாவட்டம், விருத்தாசலத்துல ராஜேந்திரப்பட்டினம்தான் எனக்கு ஊர். நேத்தே வந்துட்டேன். எங்க ஊர்ல தாழ்த்தப்பட்டவங்களுக்கு மரியாதை கெடச்சதுக்கு தி.மு.க-தான் காரணம். திராவிடர் கழகமும், தி.மு.க-வும்தான் எனக்குப் பள்ளிக்கூடம். நான் பெருசா படிக்கல. ஆனா, என் குடும்பத்துக் குழந்தைங்க படிக்குதுங்க. அதுக்கு தலைவர்தான் காரணம். இனிமே முதலமைச்சராகலன்னாலும் பரவாயில்லை. அவர் எழுந்து உட்காரணும். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுல குளிச்சிட்டு வந்து இங்கயேதான் இருக்கேன். தலைவர் சரியாகிட்டா நான் போயிடுவேன்” என்றார்.

செல்லம்மாள்

30-ம் தேதி, பிற்பகல் 2:15 மணி:

முந்தைய நாள் இரவின் பதற்றம் குறைந்து, கருணாநிதியின் உடல்நிலை சீரான தகவல், பரவலாகச் சென்று சேர்ந்திருந்தது. கட்சித் தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து திராவிட இயக்கப் பாடல்களையும், ``கலைஞரே... எழுந்து வாருங்கள்'' எனும் கோஷத்தையும் சத்தமாகப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

காவேரி மருத்துவமனைக்கு பக்கவாட்டில் இருந்த கம்பிகளுக்கு வெளியே, துணிப்பை ஒன்றை கையில் இறுக்கமாக பிடித்திருந்தார், செல்லம்மாள். 86 வயது அவருக்கு. நெல்லை மேலப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து வருவதாக, தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். சுருக்கம் விழுந்த கலையான முகம்.செல்லம்மாள்

``தனியா வந்தீங்களா? வீட்ல யாருடைய நம்பர் வெச்சிருக்கீங்க? சாப்பிடீங்களா?'' என்று நான் அடுக்கிய எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.

``நீயாச்சும் தலைவரைப் பார்த்தியாப்பா? தொண்டையில குளூக்கோஸ் இறங்குதா? ஞாபகம் இருக்கா எல்லாரையும்?” என்று அவருடைய கேள்விகள் வேறாக இருந்தன.

``நிச்சயம் குணமடைஞ்சுடுவாங்க. நம்பிக்கையோடு இருங்க. இந்தாங்க ஒரு டீ குடிங்க'' என்று தேநீரை கையில் திணித்ததும், மளமளவென அழத் தொடங்கினார். 

``எங்க வீட்டுக்கார ஐயா தி.மு.க-காரர்தான்” என்றவரிடம், அவரின் கணவர் பெயரைக் கேட்டதும், ``பேரெல்லாம் சொல்லக் கூடாது. நாட்டியமாடுற சிவன என்னான்னு சொல்லுவீங்களோ அதுதான்'' என்று சொன்னதும், ``நடராஜரா?'' என்றேன். மெளனமாக ஆமோதித்தார்.

``தலைவர் நிறைய பண்ணியிருக்கார். 14 வருஷம் முந்தி என் பேத்திக்கு ஒரு பிரச்னை. தி.மு.க-காரவுங்களவிட்டுதான் அதை சரிபண்ணார். கோபாலபுரத்துக்கு வந்து மனு கொடுத்ததும், உடனே சரிபண்ணார்” என்று மறுபடி உணர்ச்சிமயமானார். மிகவும் வற்புறுத்தித்தான் அவரை இரவு ரயிலுக்கு நெல்லை அனுப்பினோம்.

1-ம் தேதி, காலை 11 மணி:

கூட்டம் இப்போது நிதானமாக இருந்தது. அமைதியுடன் காத்திருந்தார்கள் மக்கள். வெளியூரிலிருந்து வந்திருந்தவர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் தண்ணீரையும் விநியோகித்துக்கொண்டிருந்தார்கள் கட்சித் தொண்டர்கள். மருத்துவமனைக் கதவுக்குப் பின்னால், சூழலின் எந்தப் பாதிப்புமற்று கண்களுக்கு வெளியே விழுவதற்குத் தயாரான நீருடன் நின்றிருந்த ஒருவரிடம் பேச முயன்றதும், ``உஃப் ஸாரி!'' எனக் கண்களைத் துடைத்துக்கொண்டார். 

``என் பேரு ஹரிஷ் வின்சென்ட். நான் இப்போ ஒரு ஐடி ஃபெல்லோ. அரசியல் ஞானம்லாம் எனக்கு இல்லை. ஒன்பது வருஷம் முன்னாடி நான் காதலிச்சப் பொண்ணோட வீட்டுலேர்ந்து நிறைய பிரச்னை. அவங்க சென்னை. எனக்கு ஊர்பக்கம். நிறைய எதிர்ப்புகளையும் பிரச்னைகளையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டோம். சென்னையில ஒரு ரூம் வாடகைக்கு எடுத்து ஃபேமிலி ஸ்டார்ட் பண்ணபோது, எனக்கு ரேஷன் கார்டுகூட கிடைக்கலை. என் மனைவி வீட்டுல இருந்தவங்க செஞ்ச பிரச்னைகளுக்கு அடைக்கலம் கேட்டு கோபாலபுரம்தான் போனேன். ஏன்னுலாம் தெரியலை. ஏதோ நம்பிக்கை. சமூகநீதின்னா எனக்கு கலைஞர்தான் தெரியும். 10 நாளுக்குமேல காத்திருந்து மனு கொடுத்தேன். பிரச்னைகள் சரியாச்சு. எல்லாவிதமான அரசு அடையாள அட்டைகளும் கிடைச்சது. இப்போ நான் அப்ராடு போயிட்டு வந்துட்டேன். என் வாழ்க்கையை, எனக்குக் காட்டியவர், காப்பாத்தியவர். அவர் எழுந்து உட்காரணும். அவ்வளவுதான்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!