வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (02/08/2018)

கடைசி தொடர்பு:22:20 (02/08/2018)

செல்போன் செயலி மூலம் பெண்களை மிரட்டிய இளைஞர் வழக்கு! மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம்

மொபைல் செயலி மூலம் தகவல்களைத் திருடி இளம்பெண்களை மிரட்டிய வாலிபர் வழக்கை தேவிபட்டினம் காவல் நிலையத்திலிருந்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றி விசாரணை நடத்த ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி   உத்தரவிட்டுள்ளார்.

டி.ஐ.ஜி காமினி

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே தாமரையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). இவர் தன் உறவுக்காரப் பெண்கள் 5-க்கும் மேற்பட்டோரிடம் அவர்களது செல்போனில் புதிய செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தனது செல்போனில் அவர்களது அந்தரங்க விவரங்களைத் தெரிந்துகொண்டு அதை முகநூலில் பதிவு செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து அதே தாமரையூரணி கிராமத்தைச் சேர்ந்த ராதா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தேவிபட்டினம் போலீஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது செய்யப்பட்ட தினேஷ்குமார்

இந்நிலையில் இவ்வழக்கில் பெண்கள் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் தகவல்களைச் சொல்ல அஞ்சலாம் அல்லது கூச்சமடையலாம் என்பதால் இவ்வழக்கை தேவிபட்டினம் காவல் நிலையத்திலிருந்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி காமினி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தேவிபட்டினம் அருகே தாமரையூரணி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தினேஷ்குமார் தனது உறவுக்காரப் பெண்கள் ஒரு சிலரை புதிய செயலி ஒன்றைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் தகவல்களைத் திரட்டி மிரட்டியிருக்கிறார். அந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருந்தாலும் இவ்வழக்கில் பாதிக்கப்பட்டது பெண்களாக இருப்பதால் பெண் ஆய்வாளர் ஒருவர் விசாரித்தால் மேலும், சில உண்மைகள் தெரிய வர வாய்ப்பிருக்கிறது. இவ்வழக்கில் பெண்கள் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தாலும் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம். 

மேலும், ராமநாதபுரத்திலும் சிவகங்கையிலும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்பு உணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டு அதன்படி ஒவ்வொரு பள்ளியாகக் காவல்துறை அதிகாரிகள் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் செவல்பட்டி அருகேயுள்ள அச்சராம்பட்டி என்ற கிராமத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை சிலர் மானபங்கப்படுத்தி கொலை செய்திருப்பது கவலையளிக்கிறது. அப்பெண்ணின் பெற்றோர்கள் இருவரும் வெளியில் கூலிவேலைக்குச் சென்றுவிட்ட பிறகு அச்சிறுமி தனியாக இருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதேபோல வேறு எந்தச் சம்பவமும் நடந்துவிடாமல் இருக்க பெற்றோர்கள் கவனமாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்'' என்றார்.