`உள்நோக்கத்துடன்கூடிய செயல்பாடு!’ - சிலைகடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற பழ.நெடுமாறன் எதிர்ப்பு | Pazha Nedumaran opposes TN govt’s decision to transfer all idol theft cases to CBI

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (03/08/2018)

கடைசி தொடர்பு:01:00 (03/08/2018)

`உள்நோக்கத்துடன்கூடிய செயல்பாடு!’ - சிலைகடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்ற பழ.நெடுமாறன் எதிர்ப்பு

ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாகச் செயல்படுவதால், இது தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றக் கூடாது எனத் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

பொன்.மாணிக்கவேல்

பழ.நெடுமாறன் சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றுவதென தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக நேற்று உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். மேலும், இதுகுறித்த அரசாணையும் இன்று வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், ``60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ராஜராஜ சோழன் சிலையை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வெற்றிகரமாக மீட்டுக் கொண்டுவந்தார். வேறு பல கோயில்களில் நடைபெற்ற சிலை மோசடி வழக்குகளையும் திறமையாகக் கையாண்டு வருகிறது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு. அறநிலையத்துறையின் முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும், பல அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இதில் சிக்கக்கூடும் எனச் சொல்லப்படும் நிலையில், இந்த வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றுவதாகத் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. இது மக்களிடம் ஆழமான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தமிழக ஆட்சியாளர்கள் ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவே கருத வேண்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.