கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை! மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பொதுமக்கள் மத்தியில் தி.மு.கவுக்கு உள்ள நற்பெயரைக் கெடுக்கும் விதத்தில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலின்

சென்னை விருகம்பாக்கத்திலுள்ள தனியார் ஓட்டலுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்ற 15 பேர் கொண்ட கும்பல் பிரியாணி கேட்டு தகராறு செய்துள்ளது. மேலும், கடை ஊழியர்களையும் அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு சிலர் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதனையடுத்து,  `தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.கவைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், `விருகம்பாக்கத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பிரியாணி கடைக்குச் சென்று பாதிக்கப்பட்ட உரிமையாளர் மற்றும் ஊழியர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்.  தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ள கட்டுப்பாட்டு உணர்வைக் கடைப்பிடிப்பதே தலைவருக்குப் பெருமை சேர்க்கும். அதற்கு ஊறு விளைவிப்போருக்கு தி.மு.க வில் எக்காரணம் கொண்டும் இடமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன்.

தி.மு.கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் ஒரு சிலரின் இதுபோன்ற செயல்களால், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பு வீணாவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். பொதுமக்கள் மத்தியில் கழகத்துக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் விதத்தில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன்' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!