அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மறுக்கூட்டல் விவகாரம் - மாணவர்களிடம் விசாரணை

அண்ணா பல்கலைக்கழகத்தில், தேர்வு மறுகூட்டலின்போது லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, மாணவர்களிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பாடத்திட்டம் மற்றும் தேர்வு ஆகியவை அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகவே நடத்தப்பட்டுவருகிறது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வில், 3,02,380 மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 73,733 பேர் தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிலும் 16,536 பேர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளனர். 

இந்த மறுகூட்டல் பணிகள், விழுப்புரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. மறுகூட்டலின்போது, தேர்வில் தோல்வியடைந்த சில மாணவர்களிடம் ரூ.10,000 பெற்றுக்கொண்டு, அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி அடையச் செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மாணவி ஒருவர், உரிய ஆவணங்களுடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், பேராசிரியர்கள் 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், இந்த 10 பேரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

வழக்குப்பதிவு செய்யப்பட 10 பேராசிரியர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜி.வி உமாவின் வழிக்காட்டுதலின்படியே தாங்கள் நடந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். சிறந்த கல்வி நிறுவனம் எனப் பெயர்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்திலேயே இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது, தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை காவல் ஆய்வாளர் புஷ்பலதா விசாரித்து வருகிறார். தேர்வில் 24 மதிப்பெண்கள் எடுத்து மறுகூட்டலில் 94 மதிப்பெண்களாக மாறிய மாணவர்கள் 50 பேரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும், இந்த முறைகேடு விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து, விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

மேலும் இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜி.வி உமா மீதான குற்றங்கள் நிரூபமாக்கியுள்ளன. இதனால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தேர்வு மறு மதிப்பீட்டு விவகாரம் தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்விதுறை அமைச்சர் கே.பி அன்பழகன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!