வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (03/08/2018)

கடைசி தொடர்பு:12:10 (03/08/2018)

`69% இடஒதுக்கீட்டுக்கு  எதிராக சதிவலைகள்!'- தமிழக அரசை எச்சரிக்கும் வைகோ

''சமூக நீதிக்கு எதிராகவும், குறிப்பாக தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69  சதவிகித  இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் பின்னப்பட்டுவரும் சதிவலைகளை அறுத்து எறியும் வகையில், தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, திராவிட இயக்கம் ஏற்றிவைத்துள்ள சமூக நீதிச் சுடரை அணையாமல் காப்பாற்ற வேண்டும்'' என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

வைகோ

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட இடையீட்டு மனு ஒன்றை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நஜீர் ஆகியோரைக்கொண்ட அமர்வு தள்ளுபடி செய்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வதும், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே 1992-ம் ஆண்டு அளித்த உத்தரவின் கீழ் 50 சதவிகித இடஒதுக்கீட்டைக் கடைப்பிடித்து, பொதுப் பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மற்றும் தொழில் கல்லூரிகளில் கூடுதல் இடங்களைப் பொதுப் பிரிவுக்கு ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுவருகிறது.

இதைப் போன்று, இந்த ஆண்டும் 69 சதவிகித இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரியும், 2018 - 19 கல்வி ஆண்டில், 50 சதவிகித ஒதுக்கீட்டைக் கடைப்பிடித்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்றும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தனர். இந்த வழக்கில்தான் 01.08.2018 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இடையீட்டு மனுவைத் தள்ளுபடிசெய்துள்ளனர். ஆனால், 69 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்த்தும், அதற்கு தடை கோரியும் இன்னொரு மனுவைத் தாக்கல்செய்யுமாறு, இடஒதுக்கீட்டை எதிர்ப்போருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. இதில், 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்துவிட்டதாக நாம் கருத முடியாது.
மண்டல் குழு பரிந்துரைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 1992-ம் ஆண்டில் இந்திரா சஹானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, நவம்பர் 16, 1992ல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 16(4) எனும் உறுப்பின்படி, மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்துக்கு மேல் போகக் கூடாது என்று தீர்ப்பு அளித்தது. இந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன், சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் தீர்ப்பு வரைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராக இருந்ததால், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 1993 நவம்பர் 9-ம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில், “தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டு முறை தொடர்வதற்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் தீர்மானம் சட்ட முன்வடிவாக அறிமுகம் செய்யப்பட்டு, 1993 டிசம்பர் 31ல் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவந்து, அரசியலமைப்புச் சட்டம் 31பி, 31சி ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் 9 -வது அட்டவணையில் வரிசை எண் 257ஏ-ல் சேர்க்கப்பட்டது. இதன்மூலம், தமிழகத்தில் நீதிக்கட்சி அரசு காலம்தொட்டு நடைமுறையில் இருந்துவரும் சமூக நீதி காப்பாற்றப்பட்டது.

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராகத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல்செய்யப்பட்டுவரும் நிலையில், தற்போதும் இன்னொரு மனுவை தாக்கல்செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதை தமிழக அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். சமூக நீதிக்கு எதிராகவும், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் பின்னப்பட்டுவரும் சதி வலைகளை அறுத்து எறியும் வகையில், தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, திராவிட இயக்கம் ஏற்றிவைத்துள்ள சமூக நீதிச் சுடரை அணையாமல் காப்பாற்ற வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க