வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (03/08/2018)

கடைசி தொடர்பு:13:20 (03/08/2018)

`இப்பதான் மண்ணும் மனசும் நிறைஞ்சிருக்கு!'- திருவையாறு ஆடிப்பெருக்கில் பெண்கள் உற்சாகம்

திருவையாறு பூஷ்பமண்டப படிக்கரையில் ஆடிப்பெருக்கு

காவிரி ஆற்றில், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் வராமல் வறண்டுபோய்க் கிடந்தது. இதனால், காவிரிக் கரையில் தண்ணீருக்கு நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்படும் ஆடி 18 பெருவிழா, களையின்றி கொண்டாடப்பட்டது. இந்த வருடம், காவிரியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ஆடிப்பெருக்கான இன்று, காவிரி கரையில் பெண்கள் தங்கள் குடும்பத்தோடு திரண்டுவந்து, ஆடிப்பெருக்கை கொண்டாடி வருவதோடு, மண்ணும் மனசும் இப்பதான் நிறைஞ்சிருக்கு'' என பூரிப்புடன் தெரிவித்தனர்.

காவிரி பாய்ந்தோடும் டெல்டா மாவட்டங்களில் விஷேமாகக் கொண்டாடப்படுவது ஆடிப்பெருக்கு விழா. காவிரித் தண்ணீர் தேரைப்போல ஆடி அசஞ்சு கரைபுரண்டு வருவதைக் காண்பதே தனி அழகுதான். அதோடு, டெல்டா மக்களின் உயிர் நாடியாகவும் காவிரி பார்க்கப்படுகிறது. காவிரி நீர் வந்தால்தான் டெல்டாவில் விவசாயம் செழிக்கும். மக்களின் வாழ்க்கையும் மலரும். தங்கள் வாழ்வோடு பின்னிப்பிணைந்த காவிரிக்கு நன்றி சொல்லும் விதமாகவே ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.

ஆடி 18 தினத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெண்கள் மற்றும் புதுமணத் தம்பதியர் என அனைவரும் தங்கள் குடும்பத்தோடு காவிரி ஆற்றின் படித்துறையில் படையலிட்டுத் தீபம் ஏற்றி, தண்ணீரைப் பார்த்து வணங்கி, ``எப்போதும் இதேபோல தாயான காவிரியும் உன் குழந்தைகளான நாங்களும் மகிழ்ச்சி கரைபுரள வாழ வேண்டும்'' என நன்றி கூறி வணங்குவார்கள். இந்த வருடம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், மக்கள் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் முகம் மலர கொண்டாடாடிவருகிறார்கள்.

திருவையாறு பூஷ்பமண்டப படிக்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் மக்கள்

இதுகுறித்து, திருவையாறு  புஷ்பமண்டப படிக்கரையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடிய பெண்மணி ஒருவரிடம் பேசினோம். ``மேட்டூர் தொடங்கி பூம்புகார் வரை காவிரிக் கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டாலும், டெல்டா மாவட்டத்தில் இந்த விழா இன்னும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. காவிரிக் கரையில் மட்டுமில்லை; நீர் நிலைகள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் பெண்கள் திரண்டு வந்து நீருக்கு நன்றி சொல்லிக் கொண்டாடுவார்கள்.

ஆடிப்பெருக்கில் தம்பதி

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் வராமல் ஆற்றோடு சேர்த்து விவசாயிகளின் வாழ்வும் வறண்டுவிட்டது. கடந்தடஆண்டு திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீர் கொஞ்சம்கூட இல்லாமல், மோட்டார் வைத்து தண்ணீர் இறைத்து, ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டது. இதைப் பார்த்த எங்களுக்கெல்லாம் கண்ணில் நீர் கொட்டியது. அடுத்த வருடமாவது இதுபோல இல்லாமல் ஆறும் நீரால் நிறைந்து மக்களின் வாழ்க்கையும் நிறையணும் என வேண்டிக்கொண்டோம். அதேபோல, இந்த ஆண்டு அளவுக்கு அதிகமான தண்ணீரோடு காவிரி கரைபுரண்டு ஓடுகிறாள். விவசாயிகளும் மகிழ்ச்சியாக விவசாயப் பணிகளைத் தொடங்கிச் செய்துவருகிறார்கள். இதைப் பார்க்கும்போது, எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தன்னாலேயே வந்துவிடுகிறது. இந்த ஆடிப்பெருக்கு நாளில், குடும்பத்தோடு திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் கூடிக் கொண்டாடிவருகிறோம். இப்பதான் மண்ணும் மனசும் நிறைஞ்சு கிடக்கு'' என்றார் பூரிப்புடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க