`இந்த ஊசியை போட்டுக்கிட்டா நீ சீக்கரமே குண்டாயிடுவே'- மாணவரைக் கடத்த முயன்ற கும்பல்

பள்ளிக்குச் சென்றுவிட்டு பேருந்துக்காகக் காத்திருந்த மாணவனுக்கு, மருந்து இல்லாத ஊசியைப் போட்டு கடத்த முயன்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பிய மாணவன்

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகேயுள்ள பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி- புஷ்பா தம்பதிக்கு சந்துரு, கௌதம் என இரு மகன்கள் உள்ளனர். சந்துரு, பெரம்பலூர் அருகே உள்ள தண்ணீர்ப்பந்தல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். டிரைவரான கிருஷ்ணமூர்த்தி, வெளிநாட்டிலிருந்து வந்த கஸ்டமரை பிக்கப் பண்ணுவதற்காக சென்னை சென்றிருக்கிறார். இந்த நிலையில், நேற்று காலை பள்ளிக்குச் சென்ற சந்துரு, மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்காக பேருந்துக்காகக் காத்திருக்கிறார். அப்போது மூன்று மர்ம நபர்கள் வந்து, `தம்பி நீதானே சந்துரு' என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு, ''ஆமாண்ணே நான்தான்'' என்று சொல்ல, "உங்க அப்பா என்னிடம் போனில் பேசினார். நீ சத்து குறைவா இருக்கிறாயாம். உங்க அப்பா உனக்கு ஊசி போடச் சொன்னார். இந்த ஊசியை போட்டுக்கிட்டா, நீ சீக்கரமே குண்டாகிடுவேனு" சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சந்துரு, `நான் நல்லாதானே இருக்கிறேன்' என்று சொல்ல, `தம்பி, நீ உங்க அப்பாகிட்ட பேசுனு' சொல்லி கால்பண்ணிக் கொடுத்திருக்கிறார்கள். அப்போது போனில் மறுமுனையில், `அப்பா வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கேண்டா. நீ ஊசி போட்டுக்கோனு' சொல்லியிருக்கிறார்.

அப்போது அந்த மர்மநபர், வலது கையில் ரத்தம் எடுக்கும் நரம்பில் மருந்து இல்லாத வெற்று ஊசியைக் குத்தியுள்ளார். அதனால் வலி தாங்கமுடியாத சந்துரு, கையை உதறிவிட்டு பேருந்தில் ஏறி வீட்டுக்குச் சென்றுவிட்டான். அங்கு வந்ததும், அவனுக்கு மயக்கம் படபடப்பு இருப்பதாக அவனது தாயார் புஷ்பாவிடம் சொல்லியிருக்கிறான். என்ன நடந்தது என்று விசாரித்தபோது சந்துரு மயங்கி விழுந்துள்ளான். பதறி அடித்துக்கொண்டு வாலிகண்டபுரம் அரசு மருத்துவமனையில் சந்துருவைச் சேர்த்துள்ளார். பின்னர், உயர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சந்துரு சேர்க்கப்பட்டான். அங்கு, அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மாணவனை கடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செய்தார்களா? இல்லை, கிருஷ்ணமூர்த்தி மீது தொழில் போட்டியால் செய்தார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!