சோப்புக்கட்டியான கஞ்சா... போலீஸை அதிரவைத்த கும்பல்!

தூத்துக்குடியில், கஞ்சாவை பொடியாக மாற்றி சோப்புக்கட்டிபோல தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, 7 மூட்டைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 471 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல்செய்தனர். 

கஞ்சா

தூத்துக்குடி, காந்தி நகர் பகுதியில் உள்ள நிஸ்சி இம்பெக்ஸ் என்ற ஒரு கடையில், கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிப்காட் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்படி, அப்பகுதியில் நடத்திய சோதனையில், அங்குள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் 7 சாக்கு மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில், கஞ்சாவை பொடியாக்கி, அதை சோப்புக்கட்டிகள் போல தயாரித்துப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் எடை 471 கிலோ ஆகும்.

இது தொடர்பாக மில்லர்புரத்தைச் சேர்ந்த எடிசன் மற்றும் சாந்தி நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், இவை வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்காக மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கஞ்சா கடத்தல் மற்றும் பதுக்கல்குறித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் பேசினோம், “ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து ரயில்மூலம் தமிழகத்துக்கு கஞ்சா அதிக அளவு இறக்குமதி ஆகிறது. இக்கடத்தலில், வடமாநிலப் பெண்களே முக்கியக் காரணமாக இருக்கின்றனர். இவர்கள், துணிப்பைகளில் துணிகளை எடுத்துச்செல்வதுபோல, கஞ்சாவை பொட்டலங்களாகச் செய்து, அதன்மீது சென்ட், ஸ்பிரே போன்ற வாசனைத் திரவியங்களைத் தெளித்து  எடுத்துச்செல்கிறார்கள். இதனால், ரயிலில் பயணம் செய்யும் சக பயணிகள் யாருக்கும் சந்தேகம் வராதபடி நடந்துகொண்டு கடத்திவருகிறார்கள். பெண்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்கள் மூலமாகவும்  கடத்தல்கள் நடைபெறுகிறது. 

தமிழகத்தில், மதுரையிலிருந்து தேனி, போடி வழியாகத்தான் கஞ்சா கடத்தப்பட்டுவந்தது. இப்பாதையில் போலீஸாரின் சோதனை அதிகம் உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி வழியாகக் கடத்தப்படுகிறது. இக்கடத்தல் பற்றி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல்கள் வந்தாலும், கஞ்சா கடத்திச்செல்லும் வாகனங்களை சிக்னல்கள்மூலம் பின் தொடர்ந்து பிடிப்பது என்பது சவால் நிறைந்தது. இவர்கள், தாங்கள் செல்லும் பாதையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

காவல்துறையினர், துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு கஞ்சா கடத்தலை தடுத்தும், பதுக்கலைக் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தும் வருகிறார்கள்” என்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர், காரில் மூன்று மூட்டைகளில் இருந்த 110 கிலோ கஞ்சாவை,  போலீஸார் சோதனையின்போது பறிமுதல்செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!