கிராமம்தோறும் தூய்மைக் கணக்கெடுக்க தூய்மை ரதம்! - மாவட்ட நிர்வாகத்தின் அசத்தல் முயற்சி

கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கிராமம்தோறும் தூய்மைக் கணக்கெடுப்பு (ஊரகம்) 2018 பணிக்கான தூய்மை ரதத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தூய்மைக் கணக்கெடுப்பு பணியை தொடங்கி வைத்த கலெக்டர்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூறுகையில், ``மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், கிராமங்களில் தற்போதுள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தரவரிசைப்படுத்தப்பட உள்ளது. இதற்கென தனிப்பட்ட கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்றின் மூலமாக ஊரகப் பகுதிகளில் தூய்மைக் கணக்கெடுப்பு (ஊரகம்) பணி தொடங்கப்பட உள்ளது. இந்தத் தூய்மைக் கணக்கெடுப்பானது தூய்மை பாரத இயக்கத்தின் விரிவான அளவீடுகள் அடிப்படையில் பொது இடங்களில் தூய்மை குறித்த கணக்கெடுப்பு, பொதுமக்களின் கருத்தறிதல் மற்றும் தூய்மை பாரத திட்டச் செயலாக்கம் போன்றவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையில் விரிவான மதிப்பீடு செய்யப்படும். சிறப்பாகச் செயல்படும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு 2018 அக்டோபர் 2 அன்று விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தூய்மை பாரத இயக்கத்தைச் செயல்படுத்தும் மாவட்டங்களில், தூய்மை குறித்த முன்னேற்றத்தைக் கள ஆய்வின் அடிப்படையில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராம சந்தைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களில் தூய்மை குறித்து கணக்கெடுப்பு செய்து உறுதி செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கிராம ஊராட்சிகளில் திட்டச் செயலாக்கம் மற்றும் மேம்பாட்டுக்கான பொதுமக்களின் கருத்து அறிதல் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட உள்ளன. தூய்மை குறித்த அளவீடுகளில் சேவை அளவிலான முன்னேற்றம் குறித்து அளவிடப்படவுள்ளது. எனவே, இதுதொடர்பாகப் பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்பு உணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு தூய்மை ரதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரதமானது கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் முத்துரெங்கம்பட்டி, சித்தலவாய் மற்றும் ரெங்கநாதபுரம் ஊராட்சிகளிலும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் புத்தாம்பூர் ஊராட்சி, கரூர் ஊராட்சி ஒன்றியம் புஞ்சைக் கடம்பன்குறிச்சி ஊராட்சியிலும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் முன்னூர் ஊராட்சிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!