`திருப்பரங்குன்றத்தில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்’ - முன்கூட்டியே கணிக்கும் தினகரன்

``திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை எப்போது வைத்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்தான் வெற்றி பெறும். அதுவும் குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறும்" என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தினகரன்

ஈரோட்டில் இன்று நடைபெறும் தீரன் சின்னமலை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த டி.டி.வி.தினகரன் கரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "தமிழக ஆசிரியர்களை ஒருமையில் தவறாகப் பேசிய முதல்வரின் செயல் கண்டனத்துக்குரியது. ஒரு முதலமைச்சர் சீட்டின் மாண்பு தெரியாமல், மிகமோசமாக எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடு உள்ளது. தமிழக அமைச்சர்கள் காமெடியர்களாக அவரவர் இஷ்டத்துக்குப் பேட்டி அளித்து வருகின்றனர். மக்கள் அவர்களை காமெடியர்களாகத்தான் பார்க்கிறார்கள். மக்கள் இந்த ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் நிலை விரைவில் ஏற்படும். நெடுஞ்சாலைத்துறையில் ஒரு நபர் டெண்டர் நடந்து வருகிறது. முதல்வரின் சம்பந்திக்காகத்தான் இது போன்று நடக்கிறது. முதல்வருக்கு பினாமி சம்பந்திகள் நிறைய பேர்கள் உள்ளனரா எனத் தெரியவில்லை. 1989-ல் எடப்பாடியின் சொத்து மதிப்பு என்ன, 2007-ல் மீண்டும் கட்சிக்குள் வந்து அமைச்சர் ஆன பின்பு தற்போது அவரின் சொத்து மதிப்பு என்ன. அவர் சொல்லத் தயாரா?

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பான் என்பார்கள். அதுபோல, தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடியின் ஆட்சி உள்ளது. டி.டி.வி.தினகரன் என்றுகூட சரியாக எனது பெயரை உச்சரிக்கத் தெரியாதவர்தான் தமிழக முதல்வராக உள்ளார். திருப்பரங்குன்றத்தில் எப்போது தேர்தல் வைத்தாலும் ஆர்.கே.நகர் தேர்தல்போல அ.ம.மு.க அமோக வெற்றி பெறும். அதுவும் குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழகத்திலிருந்து வெற்றி பெற்று செல்லும் எம்.பி-க்கள்தான் இந்திய நாட்டின் பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருப்பார்கள்" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!