பள்ளிச் சீருடையில் இருந்தால் கட்டணம் கிடையாது! - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

``இலவச பேருந்துப் பயண அட்டை வழங்கும் வரை பள்ளிச் சீருடையுடன் பேருந்துகளில் பயணிக்கும் மாணவ-மாணவிகளிடம் பயணச்சீட்டு கேட்கப்படாது" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

எம்ஆர் விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சி, ரெங்கசாமி நகர் முதல் உதயா நகர் வரை குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் குழாய்களை இணைக்கும் வகையில் ரூ.29.63 லட்சம் மதிப்பில் பெருவழி கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர், ``முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நல்லாசியோடும், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி கரூர் மாவட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஆண்டாங்கோவில் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடிகால் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

தமிழகத்திலுள்ள பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்காக கையடக்க விலையில்லாப் பேருந்துப் பயண அட்டை அச்சடிக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளது. அதுவரை பள்ளிச் சீருடையில் இருந்தாலே அனைத்து மாணவ, மாணவியர்களையும் அரசுப்பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கலாம் என்று ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடைநில்லாப் பேருந்துப் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி காவல்துறை, வருவாய்துறை, மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆற்றோரங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடவுள்ளனர். இதற்காக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுப்பணித்துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் குளிக்க வேண்டும். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அதிக கண்காணிப்பு செலுத்தி பாதுகாக்க வேண்டும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!