வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (03/08/2018)

கடைசி தொடர்பு:18:02 (03/08/2018)

`சசிகலா குடும்பமே பொறுப்பு '‍- சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் தீபா புகார்

சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பகீர் புகார் அளித்துள்ளார்.

தீபா
 

ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா, தீபா பேரவை தொடங்கி சில மாதங்கள் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். சமூக பிரச்னைகள் குறித்தும் கருத்து தெரிவித்து வந்தார். ஆனால், கடந்த சில மாதங்களாக அரசியலில் இருந்து சற்று விலகியிருக்கிறார்.  இந்நிலையில், இன்று காலை சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த தீபா, சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராகப் புகார் மனு கொடுத்துள்ளார்.  

அந்த மனுவில், ``ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளாக என் அத்தையோடு இருந்து அவரது சொத்துகளை சுரண்டி வாழ்ந்த சசிகலாவையும் அவரது உறவினர்களையும் எதிர்த்து குரல் கொடுத்தேன். அவர்கள் மீது போலீஸில் புகார் செய்தேன். இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கின. அவரது தூண்டுதலின் பேரில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்ததும் மேல் மாடியில் இருக்கும் என் தம்பி தீபக்கை பார்க்க வந்ததாக கூறினார்கள். தொடர்ந்து பல வழிகளில் மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது.

எனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கும், என் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். எனக்கு பலமுறை சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளது. அரசியலில் என் பெயரைக் கெடுக்கவும், என் அரசியல் பணிகளைத் தடுக்கவும் முயற்சி செய்து வருகிறார்கள். நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன். எனவே, தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க