வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (03/08/2018)

கடைசி தொடர்பு:19:15 (03/08/2018)

மின்னணு இயந்திரங்கள் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் - தமிழக தேர்தல் ஆணையம் உறுதி!

``அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மட்டுமே தேர்தல் நடத்தப்படும்'' என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மின்னணு இயந்திரங்கள்


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, சத்ய பிரதா சாகு, ``நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டமும் மின்னணு வாக்குப்பதிவுக்கு முதல்கட்ட பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்பின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் செப்டம்பர் முதல் தேதியில் வெளியிடப்படும். திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் 2019 ஜனவரி முதல் தேதியில் வெளியிடப்படும். அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், இந்த முறை மின்னணு இயந்திரம் மூலம் மட்டுமே தேர்தல் நடத்தப்படும்' என்று தெரிவித்தார்.

மேலும் `திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ மறைவு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்' என்றார். அதேபோல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், `அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை' என்று சாகு தெரிவித்தார்.