வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (03/08/2018)

கடைசி தொடர்பு:20:25 (03/08/2018)

இருப்பது ஒரு ஆம்புலன்ஸ்... தாமதம் இரண்டு மணி நேரம்... உயிருக்குப் போராடும் இளைஞர்

அவசர சிகிச்சைக்குத் தேவையான வசதிகள் கொண்ட IFT என்ற ஆம்புலன்ஸ் இரண்டு மணி நேரங்கள் தாமதமாக வந்ததால், விபத்துக்குள்ளான இளைஞர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கரூரை அடுத்த பூங்கோடை குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில் (39). கூலித் தொழிலாளியான இவர், இன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது நடையனூர் என்ற இடத்தில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இவரை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர் முதலில் முதலுதவி அளித்தார். ஆனால், செந்திலுக்கு தலையில் அடிபட்டு காது மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்ததால், மேல் சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்ல அறிவுறுத்தினார். பொருளாதார வசதி வாய்ப்பு வசதி இல்லாத செந்தில் குடும்பத்தார், அவரை தனியார் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால், அரசு ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து மருத்துவர்களிடம் உறவினர்கள் உதவி கேட்டுள்ளனர். ஆனால், கரூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருந்தும், IFT என்ற அவசர சிகிச்சைக்குத் தேவையான வசதிகள் கொண்ட 108 ஆம்புலன்ஸ் ஒரு வாகனம் மட்டுமே உள்ளது. அந்த வாகனமும் கரூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் இல்லாமல் குளித்தலையில் இருந்து வருகிறது.

இதனால், உயிருக்குப் போராடி வந்த செந்திலை இந்த ஆம்புலன்ஸ் குளித்தலையில் இருந்து கரூர் வரும் வரை காலை 11.30 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் வைத்திருந்தனர். 2 மணி நேரம் கழித்து குளித்தலையில் இருந்து  ஆம்புலன்ஸ் வந்த பின்னர்தான் செந்திலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ``கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஏழை மக்களின் உயிர் காக்க எந்த வசதியும் இல்லை. அவசர மேல் சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் IFT வசதி கொண்ட வாகனம் கரூர் மாவட்டத்தில் ஒரே ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. அதுவும் குளித்தலையில்  உள்ளது. இதனால், செந்திலை இரண்டு மணி நேரம் கழித்து மதுரைக்கு கொண்டு போயிருக்கிறார்கள். மேல்சிகிச்சைக்குச் சென்றுள்ள செந்திலின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், இதற்கு கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவ அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும்' என்று செந்திலின் உறவினர்கள் ஆவேசப்பட்டனர்.

நம்மிடம் பேசிய செந்திலின் உறவினரான சுந்தர்ராஜன், ``காலையில் அடிபட்ட செந்திலை கரூர் மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்த்தனர். அப்புறம், 'மதுரைக்கு உடனடியாக கொண்டு போங்க'ன்னு சாவகாசமாக சொன்னாங்க. நாங்க பதறியடிச்சுகிட்டு அவரை அவசர சிகிச்சை அளிக்ககூடிய வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ் உதவியைக் கேட்டோம். ஆனால், ஒரு ஆம்புலன்ஸ் மட்டும் இருந்ததால், இரண்டு மணி நேரம் கழித்து வந்தது. அதன்பிறகே, செந்திலை மதுரைக்கு அழைச்சுகிட்டு லேட்டா போனாங்க. அவரோட உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால், நாங்க சும்மா இருக்கமாட்டோம்" என்றார்கள்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிலரிடம் பேசினோம். ``கரூர் மாவட்டம் தேசிய நெடுஞ்சாலைகள் அதிகம் நிறைந்த மாவட்டம். கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை - 7 கரூர் வழியாகத்தான் போவுது. பெங்களூரு சாலை போவுது. திருச்சி டு கோவை சாலை, ஈரோடு சாலைன்னு ஏகப்பட்ட சாலைகள் போவுது. இங்கே அடிக்கடி விபத்துகள் ஏற்படுது. அதனால், IFT ஆம்புலன்ஸ்களை கூடுதலா இந்த மாவட்டத்துக்கு வழங்கும்படி தொடர் கோரிக்கை வச்சுக்கிட்டு வர்றோம். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலை. இதனால், இரண்டு உயிர் இழப்புகளே ஏற்பட்டிருக்கு. இப்போ செந்திலின் நிலைமை கவலைக்கிடமா இருக்கு. இந்தக் கொடுமைகளைத் தவிர்க்க உடனடியாக கூடுதல் IFT ஆம்புலன்ஸ்களை கரூருக்கு வழங்கணும்" என்றார்கள்.

``அவசர மேல் சிகிச்சைக்கு உண்டான IFT 108 ஆம்புலன்ஸின் டயர்கள் வழுக்கையாக உள்ளன. மதுரை வரை செல்ல முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு ஆம்புலன்ஸின் பராமரிப்பு லட்சணம் இப்படியா?'' என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.