ஓடை ஆக்கிரமிப்பு.. கோவை காருண்யா கல்வி நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

நொய்யல் ஆற்றின் கிளை ஓடைகளை ஆக்கிரமித்து, காருண்யா கல்வி நிறுவனம் கட்டிய கட்டடங்களை அகற்றக்கோரிய வழக்கில், கோவை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை காருண்யா

கோவை காருண்யா கல்வி நிறுவனம், நொய்யலின் கிளை ஆறுகளை ஆக்கிரமித்தது தொடர்பாக, வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ``கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மத்துவராயபுரத்தில் உள்ள நீர்நிலையை ஆக்கிரமித்து காருண்யா கல்வி நிறுவனம் கட்டடம் கட்டியுள்ளதால் நீர்வழிப்பாதைகள் தடுக்கப்பட்டுள்ளன. மேலும், யானை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்த இடங்களை தற்போது, காருண்யா, ஈஷா, சின்மயா மிஷன் போன்ற அறக்கட்டளைகள் பெரிதளவில் ஆக்கிரமித்துவிட்டதால், இயற்கை வளம் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் வனவிலங்குகள் வசிக்க இடமில்லாமல் சுற்றியுள்ள கிராமங்களில் நுழைகின்றன. இது போன்ற சட்ட விரோதக் கட்டடங்கள் அமைந்துள்ள பகுதிகளை மறு அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென, கோவை மாவட்ட ஆட்சியர், பேரூர் வட்டாட்சியர் மற்றும் காருண்யா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!