ஐ.ஜி.எஸ்.டி விவகாரம்: ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.450 கோடியைப் பெற்றுத் தந்தது எஃப்.ஐ.இ.ஓ

ஐ.ஜி.எஸ்.டி வரி வரவைத் திரும்ப அளிப்பதற்காகச் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்ட உதவி மையங்கள் 1,000-க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்களின் வழக்குகளைக் கையாண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு காரணங்களால் குறு, சிறு மற்றும் நடுத்தர ரக ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்குத் திரும்பி அளிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான வரி வரவை விரைவாகத் திரும்ப அளிப்பது தொடர்பான பிரச்னைகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டலத் தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல்.

ஐஜிஎஸ்டி வரி

அதைத் தொடர்ந்து, ஏற்றுமதியாளர்களுக்கான வரி வரவை (ஐ.ஜி.எஸ்.டி) திரும்ப அளிப்பதற்கான உதவி மையங்களை சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (FIEO) அலுவலகங்களிலும், திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (AEPC) அலுவலகத்திலும் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அவை செயல்பட்டன.

இந்தக் காலகட்டத்தில் 1,000-க்கும் அதிகமான ஏற்றுமதியாளர்களின் வழக்குகளை இந்த மையங்கள் கையாண்டதாகவும் சுமார் 450 கோடி ரூபாய் ஐ.ஜி.எஸ்.டி வரி திருப்பி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள டாக்டர் ஏ.சக்திவேல், இதற்கு மிகவும் உதவிகரமாகச் செயல்பட்ட மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத் தலைவர் மற்றும் அத்துறையின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக, ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலான சில மாதங்களிலேயே, வரித்தாக்கல் செய்வதிலும், செலுத்திய வரியைத் திரும்பப் டாக்டர். ஏ. சக்திவேல்பெறுவதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்படவில்லை என்றும், ஏற்றுமதியாளர்களுக்கான வரி வரவை (ஐ.ஜி.எஸ்.டி) திரும்ப அளிப்பதில் கால தாமதம் நிலவுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வரியைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாகப் பணப்புழக்கம் பாதிக்கப்படுவதாக ஏற்றுமதியாளர்கள் தொடர்ச்சியாகப் புகார் தெரிவித்தனர். மேலும், முன் மாதங்களுக்கான 'டிஜிட்டல் குறியீடு' வழங்க முடியாது என அதிகாரிகள் மறுப்பதால், ஏற்றுமதி நிறுவனங்கள், தற்காலிகமாக ஜி.எஸ்.டி வரியைத் திரும்பப் பெற முடியாத நிலை உள்ளதாகவும், இப்படிப் பல வகையிலும் ஆணையத்தின் காலதாமதம் தங்களை அலைக்கழிப்பதாக உள்ளதாகவும் ஏற்றுமதியாளர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். 

ஆனால், இந்தக் காலதாமதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தாலும் வரித்தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்குகளில் உள்ள குளறுபடிகளால்தாம் தாமதம் நிகழ்வதாக மத்திய நேரடி வரி ஆணையம் தரப்பில் கூறப்பட்டது. மேலும், 70 சதவிகித ஐ.ஜி.எஸ்.டி தாக்கல்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டதால் ஏற்றுமதியாளர்களின் வரியைத் திரும்ப அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஏற்றுமதி வரியைத் திரும்பப் பெறுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் குறியீடு முறையினாலும் தாமதம் ஏற்பட்டதாகவும் மத்திய நேரடி வரி ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், மேற்கூறிய புகார்களில் பெருமளவு, மத்திய நேரடி வரி ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கைகளால் தீர்வை எட்டியுள்ளன. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!