``தனிப்பட்ட பகையை வைத்து பொன்.மாணிக்கவேல் செயல்படுகிறார்!” - கொதித்தெழுந்த கொங்கு ஈஸ்வரன்

கொங்கு ஈஸ்வரன்

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது சரியானதுதான்” எனக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி ஈரோடு மாவட்டம், ஓடாநிலை பகுதியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்தும் மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினார். முன்னதாகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கட்சிக் கொடியை ஏந்தியபடி மணிமண்படம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தனர். தீரன் சின்னமலைக்கு மாலை அணிவிக்க வந்த பல தலைவர்களுடனும் குறைவான கூட்டமே இருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர் கூட்டத்தை அழைத்து வந்து நிகழ்ச்சி நடந்த பகுதியையே மெர்சலாக்கினார் கொங்கு ஈஸ்வரன். 

கொங்கு ஈஸ்வரன்

தீரன் சின்னமலைக்கு மாலை அணிவித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், “ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு, நாமக்கல், திருச்சி, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மட்டும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆடிப்பெருக்கு என்பது தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழா. எனவே, அடுத்த ஆண்டு முதல் ஆடிப்பெருக்கை அரசு விடுமுறை தினமாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் மோகனூரை தாலுகாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. அதைப்போலவே, நிர்வாக வசதிக்காகப் பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் உள்ள ராசா கோயிலில் சிலை திருட்டுப் போனதாக இருவரை கைதுசெய்தும், 11 பேர் மீது வழக்கு பதிவும் செய்திருக்கிறார். இந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு கடுமையாக உழைத்த பலர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். உண்மையிலேயே என்ன நடந்தது எனத் தெரியாமல், யாரோ கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையில்லாமல், பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்திருக்கிறார். தன்னுடைய பகையைத் தீர்த்துக்கொள்வதற்காகவும், மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் பொன்.மாணிக்கவேல் செயல்பட்டு வருகிறார். இதைப் பார்க்கையில், சிலை கடத்தல் வழக்குகளைத் தமிழக அரசு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பது சரிதான் எனத் தோன்றுகிறது. சி.பி.ஐ தீர விசாரித்து யாருடைய தலையீடும் இல்லாமல் சிலைகளை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.

பொன்.மாணிக்கவேல்

தொடர்ந்தவர், “தண்ணீர் வேண்டுமென்றும், காவிரிக்காக எவ்வளவு போராடினோம். ஆனால், இன்றைக்கு 8 டி.எம்.சி உபரிநீர் கடலில் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள். நிறைவேற்றப்படாத நீர்பாசனத் திட்டங்களை இந்நேரம் நிறைவேற்றியிருந்தால் வறட்சியான பகுதிகள் எல்லாம் இன்றைக்கு வளமாகியிருக்கும். அரசு இனியாவது இதைப் பாடமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!