வெளியிடப்பட்ட நேரம்: 00:40 (04/08/2018)

கடைசி தொடர்பு:00:40 (04/08/2018)

“எல்லோருக்கும் சிம்ம சொப்பனமாக எடப்பாடி இருக்கிறார்!” - சூளுரைத்த அ.தி.மு.க அமைச்சர்கள்...

எடப்பாடி பழனிச்சாமி

ஒவ்வொரு வருடமும் தீரன் சின்னமலையின் நினைவுநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், அரசின் சார்பில் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிப்பது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு 8 அமைச்சர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் போது தீரன் சின்னமலையின் வரலாற்றுப் புகழை விட, எடப்பாடியின் புகழைப் பற்றியே அதிகம் பேசி அமைச்சர்கள் புலங்காகிதம் அடைந்தனர்.

தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கே.சி.கருப்பண்ணன், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏக்கள், என பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி

நிகழ்ச்சிக்கு முன்னதாக தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழக அரசின் சாதனை விளக்கும் கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும், 2 கோடியே 60 லட்சம் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், “ஓடாநிலையில் அமைந்திருக்கக்கூடிய தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், அவருக்கு வெண்கலத்தில் சிலை அமைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்தோம். கூடிய விரைவில் ஏற்பாடு செய்து தருகிறேன் என சொல்லியிருக்கிறார். எனவே, இந்த ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு விரைவில் 8 அடியில் வெண்கல சிலை அமைக்கப்படும்” என்றார்.

எடப்பாடி பழனிச்சாமி

அமைச்சர் தங்கமணி பேசுகையில், “இன்றைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு சாமானியராக அம்மாவினுடைய ஆட்சியை மீட்டுக் காட்டுவோம் என சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். சாமானியர் எடப்பாடி பழனிச்சாமி ஆள்வதால் தான், இன்றைக்கு சாமானிய மக்களுக்கும் அனைத்துவித நலத்திட்டங்களும் கிடைக்கின்றன. எனவே, இந்த ஆட்சிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “இனிமேல் நாம் தான் ஆளப்போகிறோம் என நினைத்தவர்களுக்கு சிம்ம சொப்பனமாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். தெய்வத்தின் ஆசியும், அம்மாவின் ஆசியும் இந்தக் கட்சிக்கு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சியைப் பார்த்து கைநீட்டி குறை சொல்லாத அளவிற்கு எடப்பாடி இந்த ஆட்சியை நடத்தி வருகிறார்” என்றார்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், “5 ஆண்டுகள் அல்ல 50 ஆண்டுகாலம் ஆனாலும் இந்த ஆட்சியை எவராலும் தமிழகத்திலிருந்து அகற்ற முடியாது. இன்றைக்கு காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மக்கள் ஆடிப்பெருக்கை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இயற்கை நம்மை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி” என முடித்தார்.