வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (04/08/2018)

கடைசி தொடர்பு:08:04 (04/08/2018)

மத்திய அரசு அமைத்த மாற்றுத்திறனாளிகள் குழு மதுரை ஆட்சியரகத்தில் ஆய்வு!

இந்திய நகரங்களில் உள்ள அரசு அலுவலகக் கட்டடங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் உள்ளனவா? என, 'சுகம்யா பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் ஆய்வுசெய்ய மாநிலக்குழுக்களை அமைத்துள்ள மத்திய அரசு, அந்தந்த மாநிலங்களில் பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு அந்தக் குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்காகத் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று குழுக்கள் ஒவ்வொரு கட்டமாகக் குமரி, நெல்லை, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களை ஆய்வுசெய்தன.

மாற்றுத்திறனாளி

இதன் ஒரு பகுதியாய், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுகள் நடைபெற்றன. ஆட்சியரகத்தின் கழிவறைகள், நடைபாதைகள், ஓய்வு அறைகள், மேல் தளங்களுக்குச் செல்லும் வழிகள், அலுவலக அறைகளின் விவரங்கள் குறித்த போர்டுகள் என அத்தனையையும் குழுவினர் ஆய்வு செய்தனர். குறைகளைத் தெரிவித்ததோடு, கூடுதல் வசதிகளுக்கான தேவைகளையும் அலுவலர்களிடம் பரிந்துரைத்தனர்.

மதுரை வந்த இக்குழுவின் தலைவரும், திட்டத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவருமான டார்வின் மோசஸ் கூறும்போது, ``நாங்கள் இதுவரை ஆய்வுசெய்த ஆட்சியரகங்களில் முதன்மைக் குறைபாடாக அமைந்திருப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதிகள் இல்லாததே. மாநகராட்சி நிர்வாகம், இக்குறைகளைக் களைய வேண்டும். மேலும், பொது இடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளைச் செய்துதரவும், இருக்கும் வசதிகளை மேம்படுத்தித் தரவும் அரசு முன்வர வேண்டும். அடிப்படை வசதிகளைக் கேட்டுப் பெறுவது, மாற்றுத்திறனாளிகளின் உரிமைதானே!" எனக் கோரிக்கை வைத்தார். 

மேலும், மதுரை ஆட்சியரக அலுவலர்கள் கூறுகையில், ``மத்திய அரசின் ஆய்வுக்குழுவினர் தெரிவித்த குறைகள் அத்தனையும் சரிசெய்யப்படும். மேலும், மதுரைக்குப் புதிதாய் அமையவுள்ள ஆட்சியரகக் கட்டடம், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.