வேகமாக நிரம்பி வரும் வீராணம் ஏரி..! - விவசாயிகள் மகிழ்ச்சி

வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவது கடலூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வீராணம் ஏரி

தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் வீராணம் ஏரியும் ஒன்று. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகா விவசாயிகளின் உயிர் நாடியாக இந்த ஏரி உள்ளது. மேலும், சென்னை மக்களின் குடி நீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. கடும் வறட்சி காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் வீராணம் ஏரி வறண்டது. தற்பொழுது காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டுர் அணை நிரம்பியதையடுத்து கடந்த 19-ம் தேதி அணை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 22-ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. இதனால் கீழணை முழுக் கொள்ளளவான 8 அடியை எட்டியது. இதையடுத்து கீழணையில் நீரைத் தேக்கிவைக்க முடியாததால் கொள்ளிடத்தில் விநாடிக்கு 36 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டது. தற்பொழுது கீழணைக்கு கல்லணையிலிருந்து வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரில் அளவும் குறைந்துள்ளது. 

வீராணம் ஏரிக்குத் தண்ணீர் வரும் வடவாற்றில் 2200 கன அடியும் இதேபோல் வடக்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 450 கன அடியும், தெற்கு ராஜன் வாய்க்காலில் விநாடிக்கு 430 கன அடியும், குமிக்கிமண்ணியாற்றில் விநாடிக்கு 150 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் வீராணம் ஏரி, வடவாறு, தெற்கு, வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றில் தண்ணீர் திறந்திருப்பது கடலூர் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி வீராணம் ஏரியில் 44 கன அடி தண்ணீர் உள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாள்களில் வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டி நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!