வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (04/08/2018)

கடைசி தொடர்பு:12:02 (04/08/2018)

சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்றக் கூடாது..! தமிழக அரசுக்கு அர்ஜுன் சம்பத் கோரிக்கை

அர்ஜுன் சம்பத்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்தவகையில், இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதற்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அர்ஜுன் சம்பத், ``சமீபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், ‘ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளங்களுக்கு எனப் பெரும் பணம் செலவாகிறது என்றும் கடுமையான நிதிச் சுமையையும் தாண்டி பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம் எனப் பேசியுள்ளார்.  முதலமைச்சரின் இத்தகைய கருத்தை வரவேற்கிறேன். இந்தச் சம்பள உயர்வு மற்றும் நிதிச்சுமை சம்பந்தமான நடவடிக்கையையும் தமிழக முதல்வர் எடுக்க வேண்டும்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்தவர், ``சிலை மீட்பு விவகாரத்தில் பொன்.மாணிக்கவேல் தன்னுடைய கடமையைச் செவ்வனே செய்து வருகிறார். அவருக்கு பதவிக்காலம் முடிந்தாலும், பதவி நீட்டிப்பு செய்து தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். சிலைக் கடத்தல் வழக்குகளை தமிழக அரசு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கக் கூடாது. அதிகாரம் மற்றும் அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள் பலர் இந்தச் சிலைக் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர். அவர்களை துணிச்சலோடு எதிர்கொண்டு கைது நடவடிக்கை மேற்கொண்ட, பொன்.மாணிக்கவேலையே தொடர்ந்து இந்தச் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.