வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (04/08/2018)

கடைசி தொடர்பு:11:16 (04/08/2018)

இருப்பது ஒரு ஆணையர்... கவனிப்பது நான்கு நகராட்சிகளை...! இது கன்னியாகுமரி அவலம்

ன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தமுள்ள நான்கு நகராட்சிகளுக்கும் ஒரே கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளதால் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கும் எனவும் தனித்தனி நகராட்சி ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

சரவணகுமார்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் நகராட்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு சரவணகுமார் கமிஷனாக நியமிக்கப்பட்டார். நாகர்கோவில் நகராட்சிக்கு கமிஷனராக நியமிக்கப்பட்டபோது அவர் உடுமலைப்பேட்டை மற்றும் குளச்சல் நகராட்சிகளுக்கு பொறுப்பு கமிஷனராகவும் நியமிக்கப்பட்டார். நாகர்கோவில் நகராட்சி, குமரி மாவட்டத்தின் தலைநகர் என்பதாலும், மாவட்டத்தின் பெரிய நகராட்சி என்பதாலும் அதிகப் பணிகள் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடுமலைப்பேட்டை நகராட்சி கமிஷனர் பதவி பொறுப்பில் இருந்து சரவணகுமார் விடுவிக்கப்பட்டார். நாகர்கோவில் மற்றும் குளச்சல் நகராட்சிகளுக்கு கமிஷனராக இருந்துவந்தார். இந்த நிலையில், அவர் கூடுதலாக பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை நகராட்சிகளுக்கும் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் நகராட்சி

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளுக்கும் ஒரே கமிஷனராக சரவணகுமார் செயல்பட்டு வருகிறார். நாகர்கோவில் நகராட்சியில் பல்வேறு ஆக்கிரமிப்பு அகற்றங்கள், ஏலம் விடப்படாமல் இருந்த கடைகளை கூடுதல் வாடகைக்கு விட்டது என பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட சரவணகுமார். அத்துடன் நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறார். கமிஷனரின் செயல்பாட்டுக்கு நகராட்சி மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், நான்கு நகராட்சிகளுக்கும் கமிஷனராக சரவணகுமார் அறிவிக்கப்பட்டிருப்பதால் நாகர்கோவில் நகராட்சியில் உள்ள பல்வேறு பணிகளில் தொய்வு ஏற்படும் என மக்கள் வருத்தம் தெரிவித்தனர். நாகர்கோவில் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றும் பணிகள் முழுமையாக செயல்படும் வகையில் ஒரே நகராட்சி கமிஷனர் அறிவிக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. அதுமட்டுமல்லாது பிற நகராட்சிகளுக்குப் புதிய கமிஷனர்கள் அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.