ஆடு மேய்க்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..; கொத்துக் கொத்தாய் செத்துக்கிடந்த மயில்கள்!

மதுரை மாவட்டம், கடச்ச நேந்தல் கோல்டன் சிட்டி அருகே 47 மயில்கள் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயில்
 

கடச்ச நேந்தல் பகுதியில் இன்று காலை ஆடு மேய்க்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்காங்கே மயில்கள் செத்துக்கிடந்தன.   ஆடு மேய்க்க வந்தவர்கள் போலீஸாருக்கும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் தற்போது அந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். அந்தப் பகுதியில் நெல் குவியல் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. அதில் விஷம் கலந்து யாரோ வைத்திருக்கிறார்கள் என வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

நெல்

மயில்களை உடற்கூறாய்வு செய்த பின்னர்தான் உண்மை தெரியவரும் எனக் கூறியுள்ளனர். 40-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

அண்மையில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள குளத்தில், 4 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தானியங்களைச் சேதப்படுத்துவதால், விஷம் கலந்த தானியங்களை வீசி மயில்களை அழிக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. கயத்தாறு மட்டுமில்லை. கோவை, ஈரோடு, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவை விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். சிலர் மயில்களைக் கொல்லவும் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மயில்
 

மயில்களுக்கு விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங்கள் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   `காடுகளை அழித்து கட்டடங்களும், வீடுகளும் கட்டுவதால்தான், விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் படையெடுக்கின்றன. அவற்றின் இடத்தை நாம் ஆக்கிரமித்து வருகிறோம். ஆனால், தண்டனை பெறுவதோ ஒன்றுமறியாத அந்த உயிர்கள்தான்’ என்கின்றனர் விரக்தியுடன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!