வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (04/08/2018)

கடைசி தொடர்பு:13:05 (04/08/2018)

வீட்டில் வைத்து பிரசவம் செய்தால் கடும் நடவடிக்கை! சுகாதாரத்துறை எச்சரிக்கை

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவ வசதி கிடைக்கவிடாமல் செய்வது போன்ற செயல்கள் இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசு

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன். இவர், தன் மனைவி கிருத்திகா கர்ப்பமாக இருந்த நிலையில் மருத்துவனைக்கு செல்வதைத் தவிர்த்து அவரின் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி, வீட்டில் பிரசவம் பார்க்கும் முயற்சியில், கிருத்திகா உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், 'வீடியோ பார்த்தோ, திரைப்படங்களைப் பார்த்தோ வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம். எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள், கிராமச் சுகாதாரச் செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்க்கத் தகுதி பெற்றவர்கள். சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். தமிழகத்தில் நடைபெறும் பிரசவங்களில் 70% அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவ வசதி கிடைக்கவிடாமல் செய்வது போன்ற இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.