வெளியிடப்பட்ட நேரம்: 12:32 (04/08/2018)

கடைசி தொடர்பு:12:32 (04/08/2018)

`மூன்று மனைவிகள்... சொகுசு வாழ்க்கை' - பிரபல ரவுடி அப்புவின் மறுபக்கம்

பிரபல ரவுடி அப்பு

சென்னையில் பிரபல ரவுடியாக வலம்வந்த அப்பு என்கிற தினேஷை போலீஸார் கைதுசெய்தனர். அவர் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 5 வழக்குகள், மூன்று மனைவிகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சென்னையில் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் துணைக் கமிஷனர் சாய்சரண் தேஜாஸ் மேற்பார்வையில் உதவிக் கமிஷனர் அரிக்குமார், தலைமையில் தனிப்படை இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு மற்றும் போலீஸார் ரவுடிகளைக் கண்காணித்தனர். அப்போது ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான அப்பு என்கிற தினேஷைப் பிடிக்க போலீஸார் வியூகம் அமைத்தனர். 

இந்தநிலையில், பெரம்பூர் லோகோ பகுதியில் அப்பு பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர். அப்போது போலீஸாரைப் பார்த்ததும் அப்பு தப்பி ஓடினார். போலீஸார் அவரை விடாமல் துரத்தினர். ஒருகட்டத்தில் கீழே தவறி விழுந்த அப்புவின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அப்புவை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பிரபல ரவுடியான அப்பு என்கிற தினேஷ் டீமுக்கும் பெரம்பூரைச் சேர்ந்த கதிர் என்ற கதிரவன் கும்பலுக்கும் நீண்ட நாள்களாக மோதல் இருந்துவருகிறது. இந்த இரண்டு டீம்களிலும் பழிக்குப்பழியாக கொலை நடந்துவருகிறது. கதிரவனும் அப்பும் கூலிப்படைத் தலைவனாக இருந்து செயல்பட்டுவருகின்றனர். அப்பு, கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டுவந்தார். இவர் மீது செம்பியம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உட்பட 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அப்புவுக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். அதில் ஒருவர் கேபிள் டிவி நடத்திவருகிறார். செம்பியம் பகுதியில் அப்புவை சின்னதம்பி என்பவர் அரிவாளால் வெட்டினார். அதற்குப் பழிக்கு பழிவாங்க சின்னதம்பியை கடந்த 2010-ல் அப்பு கொலை செய்தார். ஆடம்பரமாக வாழ்ந்த அப்புவைச் சுற்றி ஒரு டீம் எப்போதும் இருக்கும். சம்பவத்தன்று அப்புவை கைது செய்ய நாங்கள் சென்றபோது அவரின் கூட்டாளிகள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அப்புவை மட்டும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளோம். தலைமறைவாக இருக்கும் அப்புவின் கூட்டாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றனர்.