வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (04/08/2018)

கடைசி தொடர்பு:17:50 (04/08/2018)

துணைவேந்தர் பதவிக்கு குறி வைத்த உமா - ஐ.ஏ.எஸ்.அதிகாரியால் பறிபோன கனவு  

அண்ணாபல்கலைக்கழகம்

போலீஸார் மற்றும் பல்கலைக்கழக நடவடிக்கையால் சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா மற்றும் அவருக்கு உதவியாக இருந்தவர்களுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர விடைத்தாள்களைத் திருத்திய பேராசிரியர்கள் சுந்தராஜன், மகேஷ், அன்புசெல்வம், பிரகதீஸ்வரர், ரமேஷ்கண்ணன், பிரதீபா, ரமேஷ் ஆகிய ஏழு பேரிடமும் விசாரணை நடந்துவருகிறது. மறுகூட்டல் விவகாரத்தில் மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சந்தேகப்பட்டியலில் இன்னும் இரண்டு முக்கியப் பதவிகளை வகித்த இரண்டு பேர் உள்ளனர். அவர்களிடமும் விரைவில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில், ``அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் மறுகூட்டல் விவகாரத்தின் பின்னணியில் பெரிய நெட்வொர்க் செயல்பட்டுள்ளது. அந்த நெட்வொர்க்கில் உள்ளவர்கள் யாரென்று எங்களுக்குத் தெரியும். அவர்களிடம் விசாரித்தால் பணம் கைமாறியத் தகவல் முழுமையாகத் தெரிந்துவிடும். இதற்கிடையில், பணம் கொடுத்த மாணவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். அவர்களின் வாக்குமூலம்தான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாகும். 
இந்த வழக்கில் மறுகூட்டல் விவகாரத்தில் எங்களிடம் சிக்கியுள்ள ஆவணங்களே போதுமானதாக உள்ளது. இந்த ஆவணங்கள் அடிப்படையில் உமா, விஜயகுமார், சிவக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவழிவகை உள்ளது. 

 உமா

உமா, விஜயகுமார், சிவக்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தக் கோப்புகளை ஆய்வு செய்துவருகிறோம். அதன் அடிப்படையில் இன்னும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் துணைவேந்தர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது. அவர் மீது ஏற்கெனவே நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட துணைவேந்தர், பினாமி பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. முன்னாள் துணைவேந்தரைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவர் மீதும் எங்களின் சந்தேகப்பார்வை உள்ளது. இந்த நெட்வொர்க்குக்கு உதவிக்கரமாக மூன்று பேர் உள்ளனர். அவர்கள் புரோக்கர்கள்போல பல்கலைக்கழகத்திலேயே வலம்வந்துள்ளனர். குறிப்பாக பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோரின் அலுவலகங்களுக்கு அடிக்கடி அவர்கள் வந்துள்ளனர். அவர்கள் குறித்தும் ரகசியமாக விசாரித்துவருகிறோம்" என்றனர். 

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்வில் மட்டும் மறுகூட்டலுக்காக 3,02,000 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 73,733 பேர் மறுகூட்டலுக்குப்பிறகு தேர்ச்சி பெற்றனர். அதில் 16,636 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தவர்களும் உள்ளனர். குறிப்பாக ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 80 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் மறுகூட்டல் மூலம் கிடைத்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்று விசாரித்தபோதுதான் மறுகூட்டலில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. அதை மூடிமறைக்கவே முயற்சிகள் நடந்தன. ஆனால், உண்மை வெளியில் தெரிந்ததும் முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக துணைவேந்தராக இருந்த ஒருவர்தான் ஓட்டுமொத்த முறைகேடுகளுக்கும் மூளையாக இருந்தார். அவர் பணியாற்றிய காலத்தில்தான் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. அவருக்கு ஆளுங்கட்சி செல்வாக்கு இருப்பதால் யாரும் தட்டிக்கேட்க முடியவில்லை. தற்போதைய துணைவேந்தர் சூரப்பாவை நியமிப்பதற்குமுன்கூட துணைவேந்தர் பதவியை குறி வைத்து ஆளுநர் அலுவலகத்தையே சம்பந்தப்பட்டவர் சுற்றிவந்தார். ஆனால், அவருக்கு துணைவேந்தர் பதவி கிடைக்கவில்லை. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, ஒருகட்டத்தில் துணைவேந்தர் பதவிக்குகூட முயற்சி செய்தார். அந்தளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருந்தது. ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரால் உமாவின் ஆசை, நிறைவேறவில்லை. அந்தளவுக்கு உமாவுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் இடையே மோதல் இருந்தது" என்றார்.