`இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி கருணாநிதி!’ - காவேரி மருத்துவமனையில் புகழாரம் சூட்டிய தலைவர்கள்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். 

ரத்த அழுத்தக் குறைவால் பாதிக்கப்பட்ட கருணாநிதி, கடந்த 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒருவார காலமாக அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று கருணாநிதியைச் சந்திப்பதற்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் வருகை தந்தார். இதற்கிடையில் நடிகர் பார்த்திபன், இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்கு காவேரி மருத்துவமனைக்குச் சென்றனர்.

கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் பிரபு, 'தி.மு.க தலைவர் கருணாநிதி பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன். மக்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர் கருணாநிதி. தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மூத்த அரசியல்வாதி கருணாநிதி' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!