வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (04/08/2018)

கடைசி தொடர்பு:17:52 (04/08/2018)

2,000 கோடி ; ஃபேக் ஐ.டி!  - தவ்ஹீத் ஜமாத்தைக் கலங்கடித்த இ-மெயில்

இன்று வரையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 2,000 கோடி சொத்துகளை ஒப்படைப்பது குறித்து மௌனம் சாதிக்கிறார் பி.ஜெ. புதிய நிர்வாகிகள் மூலமாக மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க இருக்கிறார்.

2,000 கோடி ; ஃபேக் ஐ.டி!  - தவ்ஹீத் ஜமாத்தைக் கலங்கடித்த இ-மெயில்

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஜெய்னுல் ஆபிதீன் நீக்கப்பட்டும், சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அவரது வலதுகரமாக இருந்து வந்த சையத் இப்ராகீம் என்பவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. ' அமைப்பின் முக்கிய நிர்வாகிகளுக்கு எதிராக ஃபேக் ஐ.டியைத் தொடங்கி, அவதூறு பரப்பும் வேலைகள் நடந்து வருகின்றன. அதன் ஒருபகுதியாகத்தான் சையத் நீக்கப்பட்டார்' என்கின்றனர் தவ்ஹீத்துகள் வட்டாரத்தில். 

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் பாலியல்ரீதியாகப் பேசிய குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த மே மாதம் டி.என்.டி.ஜே-வின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் பி.ஜெ என்றழைக்கப்படும் பி.ஜெய்னுல் ஆபிதீன். இதன் பிறகு, அமைப்புரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தனக்குச் சொந்தமான மண்ணடி, சூப்பர் மார்க்கெட்டைக் கவனித்து வருகிறார் பி.ஜெ. ' டி.என்.டி.ஜேவின் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அனைத்து கணக்கு வழக்குகளும் அவரிடம்தான் இருக்கின்றன. கணக்கு வழக்குகளை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்துகிறார் பி.ஜெ. மீண்டும் அமைப்புக்குள் அவர் வந்துவிடுவார்' எனவும் அவரது எதிர் அணியினர் பிரசாரம் செய்து வருகின்றனர். அதற்கேற்ப, கடந்த சில வாரங்களாக நடந்து வரும் விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். `` நாளை டி.என்.டி.ஜே பொதுக்குழு கூடுகிறது. இதில், புதிய நிர்வாகிகளைப் பதவியில் அமர்த்தும் பணியில் பி.ஜெ தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் தவ்ஹீத் ஜமாத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்கப் போகிறார் பி.ஜெ" என்றவர், `` இரண்டு நாள்களுக்கு முன்பு, டி.என்.டி.ஜே தலைமை நிர்வாகிகளுக்கு இமெயில் ஒன்று வந்தது. அந்த மெயிலில், அமைப்பில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சையத் இப்ராகீம் ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அமைப்பின் மூத்த நிர்வாகிகள் பலரும், ஃபேக் ஐ.டிகளை உருவாக்கி மற்றவர்களை ஒழித்துக் கட்டும் வேலைகளைச் செய்வதை விரிவாக விவரித்திருந்தார். இவர் டி.என்.டி.ஜே அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்தவர். ஜெய்னுல் ஆபீதினின் அனுதாபியாகப் பார்க்கப்படுகிறவர். அமைப்பில் பக்கீர் முகமது அல்ஃதாபி செல்வாக்குடன் வலம் வந்தபோது, இளம் பெண்ணுடன் அவர் பேசியதாகக் கூறி போலியான ஐ.டி மூலம் அவதூறு பரப்பப்பட்டது. 'என்னைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புகிறீர்கள்' என வீடியோவில் தோன்றி விளக்கம் அளித்தார் அல்தாஃபி. இந்த விவகாரத்தில் சையத் இப்ராகீம் மீதும் கோவையைச் சேர்ந்த ஒருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. ' நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை' என இருவரும் உறுதியாகக் கூறிவிட்டனர். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

இந்நிலையில், அந்த ஃபேக் ஐ.டியை நடத்தி வந்த நபர், ' நான்தான் இந்தத் தகவல்களைப் பரப்பினேன். எனக்குத் தகவல்களைக் கொடுத்தது சையத் இப்ராகீம்தான்' எனக் கூறிவிட்டார். இதுதொடர்பாக சையத்தை விசாரித்தபோது, 'ஆமாம். நான்தான் கொடுத்தேன்' என ஒத்துக் கொண்டார். அதன் அடிப்படையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி, 'ஐந்து வருட காலத்துக்கு அவர் மாநிலப் பொறுப்புக்கு வர முடியாது, ஐந்து வருடத்துக்கு மாவட்ட, கிளை நிர்வாகப் பதவிக்கு வர முடியாது, ஒரு வருடத்துக்கு தாவா (இறைப்பணி) செய்ய முடியாது' என அறிவித்துவிட்டனர். இதை ஏற்காத சையத் இப்ராகீம், ' நான் மட்டும் இந்தக் கள்ள ஐ.டியைப் பயன்படுத்தவில்லை. இங்கு இருக்கும் பெரும்பாலான நிர்வாகிகள் கள்ள ஐ.டியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்குப் பத்து நாளில் நீங்கள் பதில் கொடுக்க வேண்டும்' எனக் கெடு விதித்திருக்கிறார்.

சையத் இப்ராகீமின் பின்னணியில் பி.ஜெ இருக்கிறார். பி.ஜெவின் ஆபாச ஆடியோக்கள் வெளியானபோது, ' இதைப் பாதுகாத்து வைத்தது சையத் இப்ராகீம்தான்' என அப்போதே அமைப்பின் நிர்வாகிகள் பேசி வந்தனர். நாளை மறுநாள் டி.என்.டி.ஜெ பொதுக்குழு கூட இருக்கிறது. இதை மனதில் வைத்துத்தான், ' பழைய நிர்வாகிகள் யாரும் சரியில்லை. புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யுங்கள்' எனப் பி.ஜெ ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். புதிய ஆள்கள் வந்தால், அவர்கள் கட்டாயம் பி.ஜெவின் ஆதரவாளர்களாகத்தான் இருப்பார்கள். மீண்டும் டி.என்.டி.ஜெவைப் பின்புலத்தில் இருந்து இயக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறார். இன்று வரையில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் இரண்டாயிரம் கோடி சொத்துகளை ஒப்படைப்பது குறித்து மௌனம் சாதிக்கிறார் பி.ஜெ. புதிய நிர்வாகிகள் மூலமாக மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க இருக்கிறார். எனவே, பொதுக்குழுவில் பெரிய அளவுக்குப் பிரச்னை வெடிக்கவும் வாய்ப்பு அதிகம்" என்றார் விரிவாக. 

டி.என்.டி.ஜெ நிர்வாகிகளுக்கு சையத் இப்ராகீம் அனுப்பிய மெயிலைப் பார்த்தோம். அதில், ' ரியாத் மைதீன் (ஃபேக் ஐ.டி) விவகாரத்தில் என்மீது உயர்நிலைக்குழு எடுத்த நடவடிக்கை முடிவை அறிந்தேன். நான் மரணிக்கும் வரை மாநில நிர்வாகத்துக்கும் உயர்நிலைக்குழுவுக்கும் வரக்கூடாது, ஐந்து ஆண்டுகளுக்கு மாவட்ட மற்றும் கிளை நிர்வாகத்துக்கும் கூட வரக்கூடாது, ஒருவருட காலம் தாவா பணி செய்யத் தடை என்ற உங்களது அநியாயமானத் தீர்ப்பை அறிந்து வேதனை அடைந்தேன். இதை மாவட்டங்களுக்கு அறிவிப்புச் செய்து, கிளைகளுக்கும் இந்தச் செய்தி பரவி வரும் நிலையில், “நீங்கள் விபசாரக் குற்றம் ஏதும் புரிந்தீர்களா? அல்லது பொருளாதார மோசடி செய்தீர்களா? ஏன் இந்த அளவுக்குப் பாரதூரமான தீர்ப்பை உங்கள் விஷயத்தில்  சொல்லியுள்ளார்கள்” என்று பல சகோதரர்கள் கேட்கும் கேள்வியால் மனம் வெதும்பிய நிலையில், கூனிக்குறுகிப் போய் இந்த மெயிலை அனுப்புகின்றேன். ரியாத் மைதீன் என்ற போலி முகவரி மூலமாக அல்தாஃபி செய்த செயலை அதன் உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வந்ததற்காகவா இவ்வளவு பெரிய தண்டனை? எனது விஷயத்தில் நான் செய்த ஒரு செயலுக்காக இதுபோன்றதொரு முடிவை எடுப்பதற்கு முன்னதாக, 'கள்ள ஐடி வழியாக இதுபோன்ற செய்திகளை இதற்கு முன்னதாக மாநில நிர்வாகம் எதுவும் பரப்பியதே இல்லையா?'. கடந்த 20.05.18 அன்று திருச்சியில் நடந்த மாநிலச் செயற்குழுவில், 'இனிமேல் கள்ள ஐ.டிகள் மூலம் செய்யப்படும் இரண்டாம் நம்பர் வேலைகள் மாநில நிர்வாகத்தால் செய்யப்படாது என்றும் ஹிக்மத் என்ற பெயரில் இதற்கு முன்னதாக நாம் செய்து வந்த செயல்பாடுகள் இனி தொடராது' என்றும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது. 

அதற்கு முந்தைய தேதி வரை ஜமாஅத்தின் கொள்கை நிலைப்பாடு என்ன என்பதை நாம் அனைவரும் அறிந்தே வைத்துள்ளோம்.உயர்நிலைக்குழு உறுப்பினர்களாலும், மாநில நிர்வாகத்தாலும் நேரடியாக செய்ய முடியாத காரியங்களை மற்றும் சொல்ல முடியாத செய்திகளை வேறு ஆட்களை வைத்து மற்றவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியாத வண்ணம், மறைமுகமாக செய்வதும், கள்ள ஐடிகளை உருவாக்கியும் அல்லது கள்ள ஐ.டிக்களுக்கு தகவல் கொடுத்தும் எழுத வைப்பதையும் நிர்வாகத்தில் இல்லாத மற்ற நபர்கள் மூலமும், நமது ஆதரவாளர்கள் மூலமும் வேறு பெயர்களில் செய்திகளைச்  சொல்வதும் சரிதான் என்ற கொள்கை முடிவை நாம் அனைவரும் எடுத்திருந்தோம். அதையே பல விஷயங்களில் கடைப்பிடித்தும் வந்திருந்தோம். கள்ள ஐ.டி வேலை வேண்டாம் என்று நாம் என்றைக்கு மாநிலச் செயற்குழுவில் அதிகாரபூர்வமாக அறிவித்தோமோ அதன் பிறகுதான் அது நமது நிர்வாக ரீதியாக தவறான செயலாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய தேதிவரை இந்த வேலைகள் அனைத்தும் தாராளமாகச் செய்யலாம் என்பதை நமது நிர்வாக நிலைப்பாடாகவும் கொள்கை முடிவாகவும் எடுத்திருந்தோம். இவைகளை சக மாநில நிர்வாகிகளுக்கே தெரியாமல், அல்லது சக உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கும் தெரியாமல் அல்லது மாவட்ட கிளை நிர்வாகிகள் எவருக்குமே தெரியாமல் நாம் செய்த இந்த  செயல்களுக்கு என்ன தண்டனையை உங்களுக்கு நீங்களே வழங்கிக் கொள்ளப்போகின்றீர்கள் என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்' என விவரித்தவர், அகமது கபீர் போலி ஐ.டி, நாகூர் கனி போலி ஐ.டி எனப் பலவற்றைப் பட்டியலிட்டிருந்தார். 

இ-மெயிலை அனுப்பிய சையத் இப்ராஹீமிடம் பேசினோம். ' இதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கருத்து சொல்லவும் விரும்பவில்லை. இது நிர்வாகரீதியாக அனுப்பப்பட்ட கடிதம். தலைவர், செயலாளருக்கு அனுப்பப்பட்ட தனிப்பட்ட கடிதம் அது. எங்களுக்குள் பரிமாறிக் கொள்வதற்காக அனுப்பிய கடிதத்தை யாரோ கள்ளத்தனமாக வெளியில் விட்டுவிட்டார்கள். எனவே, நிர்வாகத்துக்குள் இதைப் பற்றிப் பேசி சரி செய்துகொள்ள இருக்கிறோம்" என்றவரிடம், ' ஃபேக் ஐ.டி குறித்து நிறைய குறிப்பிட்டுள்ளீர்கள். இது ஒரு கலாசாரமாகவே டி.என்.டி.ஜேவுக்குள் இருந்ததா?' என்றோம். `` இதைப் பற்றிப் பேச வேண்டாமே..." என்றதோடு முடித்துக் கொண்டார். 

கள்ள ஐ.டிக்கள் குறித்து எழுதிய இ-மெயிலும் கள்ளத்தனமாக வெளிவருவதை என்னவென்று சொல்ல?!