வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (04/08/2018)

கடைசி தொடர்பு:15:35 (04/08/2018)

`40 எம்.பி தொகுதியும் எங்களுக்கே '- தம்பிதுரை ஆரூடம்

இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க-வை யாராலும் அசைக்க முடியாது என்று கூறிய தம்பிதுரை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும் என்று ஆரூடம் தெரிவித்துள்ளார்.

தம்பிதுரை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா ரெங்கநாதபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் சீனிவாசன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ``இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது. யார் வேண்டுமானாலும் கட்சியை வழி நடத்தலாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். தமிழகத்தில் தேசியக் கட்சிகளுக்கு இடமில்லை. சிலைக் கடத்தல் வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதை வரவேற்கிறேன். பல ஆண்டு காலமாக சிலைக் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மத்திய அரசின் உதவியுடன் விசாரிப்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது'' என்றார்.

சுகப்பிரசவம்

தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``அந்தக் காலத்தில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் வீடுகளில் பிரசவம் பார்த்தார்கள். ஆனால், தற்போது போதிய மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன. அனைத்துப் பகுதிகளிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 99% பிரசவம் சுலபமாக நடக்கின்றன. எனவே, வீடுகளில் பிரசவம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் பிரசவம் பார்த்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க