`நாவல் பழத்தின் அருமை இப்போதான் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கு’ - கிலோ ரூ.200-க்கு விற்கும் வியாபாரிகள்

நாவல் பழம்

 

கரூர் மாவட்டத்தில் நகரம் தொடங்கி கிராமங்கள் வரை எங்கு பார்த்தாலும் நாவல் பழங்களை ஆண்களும் பெண்களும் வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். கிலோ 200 ரூபாய் வரை விற்கும் நாவல் பழங்களை மக்களும் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கிச் செல்கிறார்கள். நாட்டுப் பழங்களின் மவுசு கரூர் மாவட்டத்தில் கூடி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகப் பழங்களை விற்பனை செய்பவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

 நாவல் பழம் விற்கும் வியாபாரிகள்

இதுபற்றி, அரவக்குறிச்சி டு பள்ளப்பட்டிச் சாலையில் உள்ள ராஜபுரத்தில் நாவல் பழத்தை விற்பனை செய்துகொண்டிருந்த பழனி, முருகேஸ்வரி தம்பதியிடம் பேசினோம். ``மூணு தலைமுறையா எங்க குடும்பம் பழம் விற்குது. பெரும்பாலும் ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு மாதிரியான பழங்களைத்தான் அதிகம் விற்போம். அதைத்தான் மக்கள், `சத்துகள் அதிகம்'ன்னு சொல்லி வாங்குவாங்க. ஆனால், கடந்த ஒரு வருடமாகத்தான் கொய்யா, நாவல்ன்னு நாட்டுப் பழங்களை அதிகம் வாங்க ஆரம்பிச்சுருக்காங்க. 'நாட்டுப் பழங்களில்தான் சத்துகள் அதிகம். ஆப்பிளில் சத்துகள் அதிகம்ன்னு சொல்றது சும்மா வெத்து விளம்பரம்'ன்னு எங்க காதுபடவே பேசிட்டு நாட்டுப் பழங்களை வாங்குறாங்க.

அதுவும், கடந்த இருபது நாள்களாக நாட்டு நாவல் பழங்களுக்கு திடீர் மவுசு கூடி இருக்கு. கிலோ தாறுமாறா ஏறி, இப்போ 200 ரூபாய் வரை விலை விற்குது. ஆனால், மக்கள் கொஞ்சம்கூட யோசிக்காம 200 கொடுத்து நாவல் பழங்களை வாங்கிட்டுப் போறாங்க. காரணம், நாவல் பழம் நுரையீரல்களுக்கு நல்லது. அதைவிட, பிரஷர், சுகர், கிட்னியில் கல் சேர்ற பிரச்னை, மலச்சிக்கல்னு பல பிரச்னைகளுக்கு நல்லதுனு சொல்றாங்க. அதோட, இந்த நாவல் பழக் கொட்டைகளை பவுடர் பண்ணி சாப்பிடுறது சுகரை கட்டுப்பாட்டில் வைக்கும்னு சித்த மருத்துவத்துல சொல்றாங்க. காலம்காலமாக நாவல்பழம் அதே பலனை தர்ற பழமா இருந்தாலும், அதோட அருமை இப்போதான் மக்களுக்குத் தெரிஞ்சுருக்கு. கரூர் மாவட்டம் முழுவதும் சைக்கிளில், கார்களில், நடந்துனு பல ரூபத்துல பலரும் நாவல் பழங்களை விற்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அளவுக்கு இங்கே நாவல் பழத்துக்கு கிராக்கி ஏற்பட்டிருக்கு" என்றார்கள் மகிழ்ச்சியாக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!