வெளியிடப்பட்ட நேரம்: 17:26 (04/08/2018)

கடைசி தொடர்பு:17:51 (04/08/2018)

``ஆதாரங்கள் எங்கே..?’’ பொன்.மாணிக்கவேலை எச்சரித்த உயர் நீதிமன்றம்

``கவிதாவைக் கைது செய்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய வேண்டும். தகுந்த ஆதாரம் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஐ.ஜி  பொன்.மாணிக்கவேலுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

``ஆதாரங்கள் எங்கே..?’’ பொன்.மாணிக்கவேலை எச்சரித்த உயர் நீதிமன்றம்

ந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையில், `கைதுக்கான ஆதாரங்கள் எங்கே' என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி  பொன்.மாணிக்கவேலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உற்சவர் சிலை செய்ததில் தங்கத்தில் முறைகேடு செய்ததாக அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் கவிதா சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கடந்த மாதம் 31-ம் தேதி கைது செய்யப்பட்டு கும்பகோணம் கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் கவிதா தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனுவில், ``நான் எந்தக் குற்றமும் புரியவில்லை. நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் பணியாற்றி வருகிறேன். முதல் தகவல் அறிக்கையில், என் பெயர்கூட இல்லை. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்கில் என்னைச் சேர்த்துள்ளனர். சிவகாஞ்சி போலீஸார் பதிவு செய்த வழக்கு விசாரணைக்கும், காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற விசாரணைக்கும், உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வேண்டுமென்றே, வழக்கில் என்னைச் சேர்த்துள்ளனர்'' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொன் மாணிக்கவேல்

இந்த வழக்கு விசாரணையின்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை சார்பில் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஆஜராகி வாதாடினார். அப்போது, ``கவிதாவுக்குச்  சம்மன் அனுப்பி விளக்கம் கேட்காமல், நேரடியாகக் கைது செய்தது ஏன்'' என நீதிபதிகள் பொன்.மாணிக்கவேலிடம் கேள்வி எழுப்பினர். `கவிதா முறைகேட்டில் ஈடுபட்டதற்கான  ஆதாரங்கள்  இருந்ததால்தான் அவரைக் கைது செய்திருப்பதாகவும், மாஜிஸ்திரேட்டிடம் அதற்கான ஆதாரத்தைக் காட்டிவிட்டுத்தான் கவிதாவைக் கைது செய்தோம்' என பொன்.மாணிக்கவேல் பதிலளித்தார். 

நீதிமன்றம்

``கவிதாவைக் கைது செய்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய வேண்டும். தகுந்த ஆதாரம் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று ஐ.ஜி  பொன்.மாணிக்கவேலுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். கவிதா கைதுக்கான ஆதாரங்களைச் சமர்பிக்கக் கூடுதலாக பத்து நாட்கள் அவகாசம் கேட்டதையும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து திங்கள் கிழமை பரிசீலிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.கவிதா

கூடுதல் ஆணையர் கவிதா கைது குறித்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர் கவிதா. அதனாலேயே அவருக்குப் பல கொலை மிரட்டல்கள் வந்தன. அவரது நேர்மையான செயல்பாட்டால்தான் திருத்தணி தங்க கோபுர திருப்பணியின்போது அறநிலையத் துறைக்கு ஐம்பது கிலோவுக்கும் அதிகமாகத் தங்கத்தை மீட்டுக் கொடுத்தார். ஶ்ரீரங்கத்தில் பணியில் இருந்தபோது கோயில் நிலங்களை மீட்பதற்கு பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அறநிலையத் துறையின் வருவாயை அதிகரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டார். ஏகாம்பரேஸ்வரர் கோயில் சிலை வழக்குகூட அண்ணாமலை என்பவரால் போடப்பட்டது.  அறநிலையத் துறையின் இடத்தில் வாடகைக்குக் கடை நடத்திவந்தார் அண்ணாமலை. முறையாக வாடகைப் பணம் கட்டாததால் கடையைக் காலி செய்யச்சொல்லி உத்தரவிட்டது அறநிலையத் துறை. அதனால்தான் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் அறநிலையத் துறை விவகாரத்தில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர்'' என்று வழக்குத்  தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ''கவிதா கைதுக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதை உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.


டிரெண்டிங் @ விகடன்