திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல்! - என்ன சொல்கிறது தி.மு.க?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில், இடைத்தேர்தலுக்கு தற்போது வாய்ப்பில்லை எனத் தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட போஸ் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி தி.மு.க வேட்பாளர் மருத்துவர் சரவணன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில் தேர்தல் படிவத்தில் உள்ளது ஜெயலலிதாவின் கைரேகை இல்லை என்றும் அதை ஆய்வுக்கு உட்படத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அப்போதைய தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஜெயலலிதாவின் கைரேகை பெற்ற மருத்துவர் பாலாஜி, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகையைப் பெற்ற மருத்துவர் பாலாஜியின் வாக்குமூலம் பொய்யானது என்பதற்கான ஆதாரங்களைத் தி.மு.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மாரடைப்பால் உயிரிழந்தார். இதன் காரணமாக அந்தத் தொகுதி காலியாக உள்ளது. இது தொடர்பாகத் திருப்பரங்குன்றம் தொகுதியின் வேட்பாளரும் வழக்கு தொடர்ந்தவருமான சரவணனிடம் பேசினோம். `திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது எனக் கூறி வழக்கு தொடுத்துள்ளோம். அவர் இறந்தாலும் இந்த வழக்கானது தொடர்ந்து நடைபெறும். அதில் மாற்றமில்லை. அடிப்படையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கைரேகை போலியானது என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.

கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி, தேர்தல் ஆணையத்திடமிருந்து 2 கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதில் தேர்தல் நடைமுறை குறித்த கடிதமும் கைரேகை வைப்பதற்கான படிவங்களும் அனுப்பப்பட்டது. இந்தக் கடிதங்கள் அனைத்தும் இரவு 8 மணிக்குதான் அதிமுக அலுவலகத்துக்கு வந்தடைந்தது. ஆனால் மருத்துவர் பாலாஜியின் வாக்குமூலத்தில் அதற்கு முந்தைய நாளான 27-ம் தேதியே ஜெயலலிதாவிடம் ஆணையம் அனுப்பிய கடிதத்தைப் படித்துக் காட்டியதாகவும் கைரேகை படிவத்தில் மாலை 6 மணியளவில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதிலிருந்தே கைரேகை பெற்றது போலியானது என்பது நிரூபணமாகிறது. மேலும், ஜெயலலிதாவிடம் கைரேகை பெறும்போது அவர் அந்த அறையில் இல்லை என்பதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் எங்கள் தரப்பில் வாதம் முடிவடைந்தது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும்’ என்று பேசி முடித்தார். அதே போல தி.மு.க வழக்கறிஞர் அருணிடம் பேசுகையில், `வழக்கு நிலுவையில் இருக்கும்போது, திருப்பரங்குன்றத்துக்கு தேர்தல் இடைத்தேர்தல் வர வாய்ப்பில்லை. வழக்கில் தேவையான அனைத்து ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!