சீமான் பற்றி அவதூறு! காவல்துறையினர் மீது கொந்தளிக்கும் நாம் தமிழர் கட்சி

சீமான்

சமூக வலைதளங்களில் சீமான் பற்றி அவதூறு பரப்புபவர்கள்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்" என்று பெரம்பலூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் புகார் கொடுத்துள்ளார். 

பெரம்பலூர் மாவட்டத் தலைவராக இருந்து வருபவர் அருள். இவர் இன்று மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், ``தமிழக மக்களுக்காக எந்நேரமும் உழைத்துக்கொண்டிருக்கும் தலைவர் சீமான் மட்டுமே. அவர் மீது பெரம்பலூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் அறிவுரைப்படி விரகாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் சீமானை பற்றித் தொடர்ந்து பொய்யான தகவல்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் செய்திகளைப் பரப்பி வருகிறார். ஒரு வாரத்துக்கு முன்பு சீமான் சாலை விபத்தில் மரணம் அடைந்துவிட்டார் என்றும் அவரது இறுதி ஊர்வலம் இலங்கையிலிருந்து புறப்படும் என்றும் இங்ஙனம் பெரம்பலூர் நாம் தமிழர் கட்சியினர் என்று போஸ்டர் க்ரியேட் செய்து அவனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதைப் பார்த்ததும் நாங்கள் எஸ்.பி-யிடம் மனு கொடுத்தோம். ஆனால், இன்று வரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் மோடி, ஹெச்.ராஜா, தமிழிசை போன்ற தலைவர்களை எதிர்த்து கருத்துகளை பதிவிட்டவர்களைத் துரத்தி துரத்தி கைது செய்த காவல்துறை, சீமானைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. காவல்துறைக்கு இரண்டு நாள்கெடு. அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்" என்று எச்சரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!