வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (04/08/2018)

கடைசி தொடர்பு:20:10 (04/08/2018)

`பொன் மாணிக்கவேல் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்’ - பொன்.ராதாகிருஷ்ணன்

பொன்.மாணிக்கவேல் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கிவைத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ் இளைஞர் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு, கொடுமையால் கொல்லப்பட்டிருக்கிறார். அவரது உடல் முறையாகப் பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை. அவர் எப்படி கொடுமைப்படுத்தப்பட்டார் என விசாரணை நடத்த வேண்டும். 10 நாள்களுக்கு மேலாகக் கேரள மாநிலத்தில் அவரது உடல் உள்ளது. தமிழக மருத்துவர்கள் முன்னிலையில் மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும். கேரள காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். பழைமையான சிலைகளை மீட்டுக் கொண்டுவந்தார். நீதிமன்றமே அவரைப் பாராட்டியுள்ளது. சிலை கடத்தல் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்துவது பற்றி  மத்திய அரசுதான் முடிவு செய்யும். கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டுவருவது நல்லது. ஓ.பி.எஸ் உறவினருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது மனிதாபிமானம் அடிப்படையிலானது.

தேனி குரங்கணியில் தீயில் சிக்கியவர்களுக்காக உடனடியான உதவிகளை ராணுவ அமைச்சர் செய்தார். அவர் பார்வைக்கு கட்டாயம் அவசியம் எனப்பட்டதால் உதவி செய்திருக்கிறார். தமிழக முதல்வரை சந்தித்து ரப்பர் உற்பத்தி, சமூக காடுகள் குறித்து அவரது கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளேன். நம் நாட்டின் தேவைக்குதக்கபடி ரப்பர் உற்பத்தி செய்யவில்லை. எனவே, ரப்பர் இறக்குமதி செய்துதான் ஆக வேண்டும். விமான நிலையம் அமைக்க குமரி மாவட்டத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ள இடம் தகுதியானது இல்லை எனக் கூறுகிறார்கள். அதுபற்றியும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்வோம். சாய் சப்சென்டர் அமைக்க குறைந்தது 50 ஏக்கர் நிலம் தேவை. குமரி மாவட்டத்தில் அமைக்க வாய்ப்பு குறைவுதான். தமிழகத்தில் எங்காவது அமைக்க வேண்டும். வருமானவரி செலுத்துவது அனைவரது கடமை. அப்படி செலுத்துபவர்களுக்கு எந்த பயமும் இல்லை" என்றார்.