வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (04/08/2018)

கடைசி தொடர்பு:23:30 (04/08/2018)

கடனை திருப்பி செலுத்தாததால் கே.சி.பழனிச்சாமி சொத்துகளை ஜப்தி செய்ய எஸ்.பி.ஐ வங்கி முடிவு!

கரூர் மாவட்ட தி.மு.க முக்கியப் புள்ளியான கே.சி.பி என்கிற கே.சி.பழனிச்சாமி ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால்,அவரது சொத்துகளை ஜப்தி செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது எஸ்.பி.ஐ வங்கி.

 கே.சி பழனிச்சாமி

 கரூர் மாவட்ட தி.மு.கவில் முக்கியப் புள்ளியாக இருப்பவர் கே.சி.பி. கரூர் தொகுதி எம்.பியாகவும், அரவக்குறிசி எம்.எல்.ஏ வாகவும் இவர் இருந்திருக்கிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் இப்போதைய அமமுக கட்சி எம்.எல்.ஏவான செந்தில்பாலாஜியிடம் தோல்வியை தழுவினார். சாதாரண நிலையில் இருந்த இவர், காவிரியில் மணல் அள்ளியும் அதன்மூலம் பொருளாதார நிலையில் உயர்ந்தார். சிமெண்ட் ஆலைகளுக்கு சாக்கு தயாரிக்கும் தொழிற்சாலைகள், மில்கள் என்று இவரது தொழில்கள் பெருகின. செந்தில்பாலாஜியே இவரை எதிர்த்து போராட்டம் நடத்திதான் ஜெயலலிதா கவனத்திற்கு போய், அரசியலில் உயரம் பெற்றார். அப்படிப்பட்ட கே.சி.பிக்கு ஒரு வருடமாக தொழில்களில் பலத்த அடி. நஷ்டம். கோயில் கும்பாபிஷேகத்திற்கு யார் கேட்டாலும் லட்சம் லட்சமாக அள்ளிக் கொடுத்த அவர், கடந்த ஒருவருடமாக பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தார். இந்நிலையில்தான்,அவர் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் சில வங்கிகளில் கடனாக இவர் பெற்ற எழுபத்து மூன்று கோடியே நாற்பத்து ஒரு லட்சத்து பதிமூன்றாயிரத்து ஐநூற்று எழுபத்து ஒரு(ரூ 173,41,13,571) ரூபாயை திருப்பி செலுத்தவில்லை என்று அவரது பத்துக்கும் மேற்பட்ட அசையா சொத்துகளை ஜப்தி செய்வதாக தினசரிகளில் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரபூர்வமான அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது கே.சி.பி குடும்ப வட்டாரம் மற்றும் கரூர் மாவட்ட தி.மு.கவினர் மத்தியில் பலத்த அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.


புதுச்சேரியில் இயங்கி வரும் கரூர் கே.சி.பி பேக்கேஜிங்ஸ் லிட் கம்பெனிக்காக தனது பெயர், தனது மனைவி தம்பி, மற்றும் தம்பி மனைவி ஷ்யூரிட்டியில் இந்த தொகையை வாங்கியுள்ளதாக தெரிகிறது. மேற்படி கடன் தொகையை 60 நாள்களுக்குள் கட்டும்படி கடந்த 17.05.2018 அன்று வங்கி சார்பில் இவர்களுக்கு டிமாண்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், 60 நாள்கள் கடந்தும் கே.சி.பி தரப்பில் கடனை திருப்பிச் செலுத்த எந்த முயற்சியும் செய்யாததால் கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐடிபிஐ வங்கிக் லிட் இணைந்து பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில் கூட்டாக ஜப்தி கையகப்படுத்துதல் அறிவிப்பை வெளியிட்டு கே.சி.பி தரப்பை அதிர வைத்திருக்கிறார்கள்.
 

இதுபற்றி, இதன் உள்விவரங்களை அறிந்தவர்களிடம் பேசினோம்."கே.சி.பி மணல் அள்ளிதான் முன்னேறினார். அதை வைத்து தொழில்களை பெருக்கினார். ஆனால்,அதை சரிவர நிர்வகிக்க தவறிட்டார். கட்சிக்கு ஏகப்பட்ட பணத்தை செலவு செய்தார். வரிசையாக கடன்களை வாங்கி தொழில்களை விருத்தி செய்தார். அகலக்கால் வைத்துவிட்டார்ன்னுதான் சொல்லனும். ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இவரது தொழில்கள் தள்ளாட்டத்தில் இருக்கிறதுங்கிறதை புரிஞ்சுகிட்டு அவரது மகன், இவரை தள்ளி வைத்துவிட்டு நிர்வாகத்தை கையில் எடுத்தார். ஆனால், இழப்புகளை சரிசெய்ய முடியவில்லை. அதனால்,அவரது சொத்துகளை ஜப்தி செய்வதற்கான அறிவிப்பை கடன் கொடுத்த வங்கிகள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கு. இதில் இருந்து மீண்டு வருவது அவருக்கு சிரமம்தான்" என்றார்கள்.