தி.மு.க பிரமுகர் வி.கே.குருசாமி திடீர் கைது -பின்னணி என்ன?

மதுரை திமுக பிரமுகரும், முன்னாள் மண்டலத் தலைவருமான வி.கே.குருசாமி நேற்று இரவு போலீஸாரால் திடீரென்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும்  தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த திடீர் கைதுக்குக் காரணம் என்னவென்பதை விசாரித்தோம்.

வி.கே.குருசாமி

திமுக பிரமுகரான வி.கே.குருசாமி தரப்புக்கும், அதிமுகவைச் சேர்ந்த  முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பகை இருந்து வருகிறதும், இரண்டு தரப்பிலுமாக 20 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளதும், இரண்டு தரப்பும் கொலை வெறியோடு பகை தீர்த்துக்கொள்ள அலைந்து கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதைக் காவல்துறையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் குருசாமியின் உறவினர் காளிஸ்வரன் என்பவரை கள்ளத் துப்பாக்கியுடன் அவனியாபுரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து வி.கே.குருசாமியும் கள்ள துப்பாக்கியுடன் சுற்றி வருவதாகக் கிடைத்த  தகவலினால் அவரைத் தேடி வந்தனர்.

மகள் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு நேற்று இரவு வரும்பொழுது  முனிச்சாலை அருகே காவல்துறையினர்  வி.கே.குருசாமி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள். காரில் துப்பாக்கி இருந்ததைத் தொடர்ந்து வி.கே.குருசாமி, அவர் உறவினர் மகாபிரபு, கார் ஓட்டுநர் ரபீக்ராஜா ஆகியோரைக்  கைது செய்தனர்.

கார் மற்றும், ஐந்து தோட்டாக்களுடன் கைப்பற்றப்பட்ட கள்ள துப்பாக்கியுடன் மதுரை மாவட்ட  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். மூவரையும் ஆகஸ்ட் 17 -ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவுவிட்டார். அதைத் தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அவர்கள்  அடைக்கப்பட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!