`தமிழகம் முழுவதும் 6-ம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்படாது' - ரேசன் ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 6-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ரேசன் கடை

 

சம வேலைக்குச் சம ஊதியம், எடைக் குறைவு இல்லாமல் பொருள்கள் வழங்குதல், சேதாரக்கழிவுகளை அனுமதித்தல், பணி வரன்முறை, மானியத்தொகை விடுவித்தல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக நியாயவிலைக்கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் தங்கள் கோரிக்கைகளுக்குத் தீர்வு எட்டப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள நியாயவிலைக்கடை ஊழியர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 6-ம் தேதி வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 6 மாதமாகக் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தியும் அரசு பாராமுகமாக உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இதன்காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகள் அனைத்தும் வருகின்ற 6-ம் தேதி திறக்கப்படாது என அறிவித்துள்ளனர். பொதுமக்கள் நலன் காக்க நடத்தப்படும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!