வெளியிடப்பட்ட நேரம்: 03:21 (05/08/2018)

கடைசி தொடர்பு:06:01 (05/08/2018)

சென்னையில் விடிய, விடிய பெய்த மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக நேற்று மாலை முதலே இடியுடன் கூடிய மழை பரவலாகப் பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னைக்கு நீர் வழங்கக்கூடிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை பொழிந்து வருகிறது. இதன்காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து வரத்தொடங்கியுள்ளது. சென்னை அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு முழுக்க கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக நேற்று மாலை முதலே சென்னை நகரெங்கும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மழை


சமீபத்தில் கர்நாடகாவில் கன மழை காரணமாக அணைகள் நிரம்பியதால் காவிரி ஆற்றில் தண்ணீரைத் திறந்துவிட்டது கர்நாடகா. அதன்காரணமாக மேட்டூர் அணை நிரம்பி, அங்கிருந்து விவசாயத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டது. காவிரி ஆற்றில் நீர் இரண்டு கரைதொட்டு ஓடுவதால், அதனை ஒட்டியுள்ள கிராம, நகர மக்களனைவரும் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியை மிகுந்த உற்சாக மனதுடன் கொண்டாடினர். அதேபோல, சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாகப் பெய்யும் மழையால் சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு குறையக்கூடும்.