வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (05/08/2018)

கடைசி தொடர்பு:10:00 (05/08/2018)

ஓ.பி.எஸ் கண்ணெதிரே நடந்த செயின் பறிப்பு சம்பவம்

தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நடத்திய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி

கடந்த 2016-ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா இறப்பு, அதிமுக பிளவு போன்ற காரணங்களால் அவரால் தொகுதிக்கு சரிவரச் செல்லமுடியவில்லை. இதனால் போடி மக்கள் ஓ.பி.எஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். 

இந்நிலையில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு தேனி ஒன்றியம் பகுதியில் ஓ.பி.எஸ் தலைமையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று தாடிச்சேரி, ஸ்ரீரங்கபுரம், நாகலாபுரம் ஆகிய பகுதியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓ.பி.எஸ் கிளம்பும் போது அவருடன் பல கார்கள் மற்றும் இருசக்கரவாகனங்கள் சென்றன. அப்போது பன்னீர்செல்வத்தின் காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக பெண் பிரமுகர் வீரமணியையும் அவரது கணவரையும் கீழே தள்ளி அவர்களின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. பிறகு கீழே விழுந்த இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

இந்நிலையில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்த இடத்தில் அவரின் கண்முன்னே நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தால் கடும் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டார். தமிழக துணை முதல்வர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர் போன்ற அனைவருமே உடன் இருந்த போது நடந்த இந்த வழிப்பறி சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.