வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (05/08/2018)

கடைசி தொடர்பு:14:05 (05/08/2018)

டெல்லி சென்று நரசிம்மராவுடன் தம்பிதுரை பேசுவார் - திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சிரிப்பலை

இந்தியாவின் பிரதமர் யார்? இந்த கேள்வியை பள்ளிகுழந்தைகளைக் கேட்டாலும் 'மோடி' என்று பதில் வரும். ஆனால் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு மட்டும் இது மறந்துவிடுகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக மன்மோகன் சிங் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 'பாரத ரத்னா' எம்ஜிஆர் என்பதற்கு பதிலாக பாரதப் பிரதமர் எம்ஜிஆர் என அதிர வைத்தார். இந்நிலையில் நேற்று துணைசபாநாயகர் தம்பித்துரை டெல்லி சென்று நரசிம்மராவுடன் பேசுவார் என பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன் 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய சீனிவாசன், '' இந்த தொகுதியின் எம்எல்ஏ பரமசிவத்தின் அன்பு அழைப்பை ஏற்று நானும் அமைச்சர் விஜயபாஸ்கர் வந்துள்ளோம். நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பரமத்திவேலூரில் பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு மதிய உணவுக்கு இங்கு வந்து விடுவார். மீண்டும் மாலை உணவுக்கு புதுக்கோட்டை சென்று விட்டு அதன்பின் டெல்லியில் போய் உட்கார்ந்து நரசிம்மராவ் உடன் பேசுவார்'' என்றார்.

இதனைக் கேட்டு கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. ஆனாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் அமைச்சர் தொடர்ந்து பேசிவிட்டு அமர்ந்தார். இறந்து போன முன்னாள் பிரதமர் நரசிம்மராவைக் கூட நினைவில் வைத்திருக்கும் அமைச்சர் சீனிவாசனால், தற்போதைய பிரதமர் மோடி பெயரை ஏனோ நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. பாஜகவை விட காங்கிரஸ் தலைவர்களைத் தான் தனது பேச்சில் அடிக்கடி குறிப்பிடுகிறார். பாஜகவை விட காங்கிரஸ் கட்சியின் மீது சீனிவாசனுக்கு அதிக ஈடுபாடு இருப்பதை அவரது பேச்சு காட்டி கொடுத்து விடுகிறது. கெட்டப் மாறினாலும் கொண்டை காட்டிக்கொடுத்துவிடுகிறது என்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.

 தொடர்ந்து வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டார். அங்கு சீனிவாசன் பேச எழுந்த போது, 'பார்த்துப் பேசுங்கள்' என தம்பித்துரை அவரிடம்  கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சி முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. தம்பித்துரையும், விஜய பாஸ்கரும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். சீனிவாசனையும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்தார்கள் ஆனால் 'எதுக்கு வம்பு நான் என்னத்தையாவது பேசிடுவேன். அதை பெருசாக்கிடுவாங்க.. நான் வரலை' என ஒதுங்கிக் கொண்டார். திண்டுக்கல் சீனிவாசன் கலகல பேச்சு தொடர்ந்து வருவது அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க