வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (05/08/2018)

கடைசி தொடர்பு:11:02 (06/08/2018)

செல்ஃபி காலத்தின் முதல் குறிஞ்சிப்பூ சீசன்... மிஸ் பண்ணிடாதிங்க மக்களே!

கடந்த மே மாதம் இறுதியில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூத்தக் குறிஞ்சி, தற்போது, மலை முகடுகள் முழுவதும் பூத்து நிற்கின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த இயற்கையின் அற்புதத்தைக் காண கண்கோடி வேண்டும்

செல்ஃபி காலத்தின் முதல் குறிஞ்சிப்பூ சீசன்... மிஸ் பண்ணிடாதிங்க மக்களே!

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் குறிஞ்சிப்பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூக்கள், இந்தாண்டு மலை முழுவதும் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்து படைப்பதாய் உள்ளது. கடந்த மே மாதம் இறுதியில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் பூத்தக் குறிஞ்சி, தற்போது, மலை முகடுகள் முழுவதும் பூத்து நிற்கின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இந்த இயற்கையின் அற்புதத்தைக் காண கண்கோடி வேண்டும். மலை முகடுகள் முழுவதும் நீலப்போர்வை விரித்தாற்போல் காட்சியளிக்கின்றன. கொடைக்கானல் சீசன் முடிவடைந்த நிலையில், குறிஞ்சிப் பூக்களை பார்ப்பதற்காக தற்போது சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். உள்ளூர் மக்கள், மலைகளில் டிரெக்கிங் சென்று குறிஞ்சிப் பூக்களைப் பார்த்து ரசிப்பதுடன், செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் ஆர்வமுடன் பதிவிட்டு வருகிறார்கள். 

குறிஞ்சிப்பூக்கள் 

மேல்மலை, கீழமலை பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக குறிஞ்சி பூக்கத் தொடங்கியது. நடுமலைப்பகுதிகளான கொடைக்கானல், வில்பட்டி, புலியூர் போன்ற பகுதிகளில் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. மேல்மலை பகுதியில் அடர் நீல நிறத்தில் இருக்கும் குறிஞ்சிப்பூ, கீழ்ப் பகுதிக்கு வரும்போது, அடர்த்தி குறைந்து வெண்மை கலந்த நிறத்தில் காட்சியளிக்கிறது. மீண்டும் குறிஞ்சிப் பூக்களைப் பார்க்க பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதால், இந்த சீசனை பிரபலப்படுத்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை ஒரு மாதம் குறிஞ்சி விழா என்ற பெயரில் விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. பிரையண்ட் பார்க்கில் குறிஞ்சி பூக்கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிஞ்சிப் பூக்கள் குறித்த விளக்கக் கையேடு, வாகனங்களில் ஒட்டும் ஸ்டிக்கர் எனத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம். 

குறிஞ்சி பூக்கள்

 

குறிஞ்சி மலர்கள் பற்றி பேசிய கொடைக்கானல் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த மைக்கேல், ‘‘ இது அருமையான சீசன். புல்வெளிப் பகுதிகளில் மலைமுகடுகள் முழுவதும் நீலக்குறிஞ்சி காட்சியளிக்கிறது. இத்தனை ஆண்டுகளை விட இந்தாண்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பார்வையிட்டு வருகிறார்கள். தற்போது வடகவுஞ்சி அருகே மேல்பள்ளம் பகுதியில் அதிகளவில் குறிஞ்சி பூத்துள்ளது. புலியூர் புல்வெளி, மன்னவனூர் அடுத்த அக்கரைக்காடு, வெள்ளகவி போன்ற இடங்களில் அதிகளவு குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளன. கடந்த குறிஞ்சி சீசனின் போது, கோகர்ஸ்வாக் அருகே குறிஞ்சி பூக்களுக்கான ஒரு பூங்கா அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அரசு தொடர்ந்து அதில் கவனம் செலுத்தாத காரணத்தால் அங்குப் பூங்கா அமைக்கப்படவில்லை. ஆனால், அப்போது எடுத்த முயற்சியின் காரணமாக தற்போது அந்தப் பகுதியிலும் குறிஞ்சி பூத்துள்ளது. குறிஞ்சி பூக்களில் கிடைக்கும் தேன் மருத்துவ குணம் வாய்ந்தது’’ என்றார். 

இந்த இயற்கையின் பேரழகை காணும் வாய்ப்பைத் தவறவிட்டால் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டும். இயற்கை அன்னை, மலைகளின் இளவரிசிக்கு நீல நிறப் பூக்களால் ஆடை போர்த்தியுள்ள அழகைக் காண வாருங்கள். இயற்கை அழகை அள்ளி அள்ளிப் பருகுங்கள். குறிஞ்சி விழாவைக் கொண்டாடுவோம். இயற்கையைப் போற்றுவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்