வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (05/08/2018)

கடைசி தொடர்பு:15:23 (05/08/2018)

`தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்தேன்' - நலம் விசாரித்த ராம்நாத் கோவிந்த் தகவல்!

தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்குச் சென்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

கருணாநிதி


சென்னை காவேரி மருத்துவமனையில் தி.மு.க தலைவர் கருணாநிதி ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக சிகிச்சை பெற்றுவருகிறார்.கடந்த மாதம் 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அவ்வப்போது, அறிக்கை வெளியிட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நிலை மருத்துவத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதிலிருந்து, தேசிய மற்றும் மாநில அமைச்சர்கள், கட்சி பிரமுகர்கள், திரையுலகினர், உள்ளிட்ட ஏராளமானோர் காவேரி மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர். அண்டை மாநில முதல்வர்களும் காவேரி மருத்துவமனைக்கு வந்து அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். சமீபத்தில் துணை ஜனாதிபதி, வெங்கையநாயுடு வருகை தந்தார். இந்நிலையில், சென்னை வந்த  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், காவேரி மருத்தவமனைக்குச்சென்று தி.மு.க தலைவர் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், `திரு கருணாநிதி அவர்களைச்  சென்னையில் சந்தித்தேன். அவர்களின் குடும்பத்தார் மற்றும் மருத்துவரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழ்நாடு முன்னாள் முதல்வரும் முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

இந்த சந்திப்பின் போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடன் இருந்தார்.