வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/08/2018)

கடைசி தொடர்பு:07:38 (06/08/2018)

ஹீலர் பாஸ்கர் கைது..! விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

தற்பொழுது தமிழ்நாட்டில் மரபுவழி மருத்துவம் குறித்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் அனல் பறக்கின்றன. திருப்பூரில் வீட்டிலேயே கணவர் தன் மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் அந்தப் பெண் உயிரிழந்தச் சம்பவம் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தது. இதற்கிடையே சுகப் பிரசவ பயிற்சிக்கு விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது சம்பவம் கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் பெருகிவருகிறது.

பி.ஆர்.பாண்டியன்

இந்நிலையில், மரபுவழி மருத்துவத்துக்கு உரிய முறையில் பயிற்சி அளிக்க தமிழக அரசு கொள்கைத் திட்டம் உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலரும் தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவருமான பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்துகிறார். இதுகுறித்து பேசும் அவர், 'சமீபகாலமாக அனைத்துப் பிரசவங்களுக்கும் அறுவை சிகிச்சை என்ற தவறான முறை பின்பற்றப்படுகிறது. இதனால்தான் மரபுவழி மருத்துவம் மீது மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மரபுவழி மருத்துவத்தை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு உரிய முறையில் சட்டபூர்வமான பயிற்சி அளிக்கும் விதமாக தெளிவான கொள்கைத் திட்டத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். ஹீலர் பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது' என்று தெரிவித்தார்.