ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில்  உள்ள மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் தர்ஹாவில் தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு திருவிழா இன்று அதிகாலை சிறப்பாக நடந்தது.

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா

ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிமின் அடக்க தலம் உள்ளது. இங்கு முஸ்லிம் மதத்தினர் மட்டுமல்லாது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக தென் மாநிலங்களான கேரள, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக அளவிலான மக்கள் ஏர்வாடி தர்ஹாவுக்கு வேண்டுதல் செய்வர். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு தங்கியிருந்து பிரார்த்தனை செய்து வந்தால் அவர்கள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. இதனால் இங்கு ஏராளமான மனநல காப்பகங்கள் இயங்கி வருகின்றன.

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு

இந்நிலையில் இங்கு அடக்கமாகியுள்ள மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் தர்ஹாவின் 844-ம் ஆண்டு உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 24-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு இன்று காலை 6 மணியளவில் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராஹிம் மஹாலிலிருந்து தாரை, தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் குதிரைகள், யானை முன் செல்ல சந்தனக் குடங்களை தர்ஹா நிர்வாகத்தினர் எடுத்து வந்தனர். முன்னதாக 35 அடி உயர அலங்கரிங்கப்பட்ட சந்தனக்கூட்டில் இக்குடங்கள் கொண்டு வரப்பட்டது.  இதைத்தொடர்ந்து பாதுஷா நாயகத்தின் அடக்க தலத்தில் சந்தனம் பூசப்பட்டு வண்ணப்போர்வை போர்த்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்திலிருந்து வந்திருந்த அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். விழாவுக்காக வந்திருந்த யாத்ரீகர்களின் நலனுக்காக சிறப்பான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தர்கள் பொது மகா சபையினர் செய்திருந்தனர். சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு இன்று  உள்ளூர் விடுமுறையும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!