புகைபோக்கி முதல் ஆர்சனிக் வரை... ஸ்டெர்லைட் முன்வைக்கும் விளக்கங்களும் சில முரண்களும்! | The explanation given by Sterlite and mismatches in that

வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (06/08/2018)

கடைசி தொடர்பு:10:07 (06/08/2018)

புகைபோக்கி முதல் ஆர்சனிக் வரை... ஸ்டெர்லைட் முன்வைக்கும் விளக்கங்களும் சில முரண்களும்!

ஸ்டெர்லைட்டிலிருந்து வெளியாகும் ஆர்சனிக் முழுமையாகக் காற்று மூலமாகவோ, நீர் மூலமாகவோ வெளியேற்றப்படுகிறது. இவ்வளவும் வெளியேற்றப்பட்டால் நிச்சயமாக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். 

புகைபோக்கி முதல் ஆர்சனிக் வரை... ஸ்டெர்லைட் முன்வைக்கும் விளக்கங்களும் சில முரண்களும்!

தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட, கடந்த மே-28-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சீல் வைத்தது. இதையடுத்து கடந்த 23-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம், ``தூத்துக்குடி சிப்காட் பகுதியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மேற்கொண்ட ஆய்வில், அந்தப் பகுதியிலுள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது இல்லை என்று தெரியவந்தது. அந்த நீரில், ஈயம், குரோமியம், மெக்னீசியம், இரும்பு ஆகியவற்றின் அளவுகள் அனுமதிக்கப்பட்ட அளவுகளைவிட அதிகமாக உள்ளது' என்று தெரிவித்திருந்தார். அதற்கு, 'மத்திய அமைச்சர் குறிப்பிட்ட உலோகங்கள், நிலத்தடிநீரில் கலக்க வாய்ப்பில்லாத வகையில், ஸ்டெர்லைட் ஆலைச் சார்பில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது' என்று விளக்கமளித்தது. இதுபற்றி சில நாள்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் சி.இ.ஒ விகடனுக்கு  பேட்டியளித்திருந்தார். அவர் பதில்கள் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமனிடம் விளக்கம் கேட்டிருந்தோம். அதற்கு அவர் கொடுத்த விளக்கங்கள் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் சரிந்துவரும் தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்ளும் வேலைகளில் இப்போது இறங்கியிருக்கிறது. அதனால் திரும்பத் திரும்ப பழைய பொய்களையே சொல்லிக் கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்கள், விளம்பரங்கள் எனப் பல வழிகளில் தவறான தகவல்களைச் சொல்லி வருகிறது. 

பற்றாக்குறையான நிலமும், பசுமை அரணும்! 

ஒரு நாளைக்கு 1,200 டன் உற்பத்தி செய்யும் ஆலை, தன்னிடம் 172.17 ஹெக்டேர் நிலம் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால், எங்களிடம் இருக்கும் ஆதாரத்தின்படி, ஸ்டெர்லைட்டிடம் இருக்கும் நிலம் 102.3 ஹெக்டேர் நிலம் மட்டுமே. இந்த நிலப் பற்றாக்குறையால் மாசுக் கட்டுப்பாட்டு சாதனங்களைக் கட்டமைப்பதில் சமரசங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட உரிமத்தின்படி, நிறுவனத்தைச் சுற்றிலும் 30 சதவிகிதம் மரங்கள் மூலமாகப் பசுமை அரண் அமைக்கப்பட வேண்டும். அதாவது இந்திய அரசின் முறைப்படி 5,000 மீட்டர் அகலம் கொண்ட பசுமை அரண் அமைக்க வேண்டும். அதை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 250 மீட்டராக குறைத்தது. ஆனால், மீண்டும் ஸ்டெர்லைட் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைத் தொடர்புகொண்டு கேட்ட பின்னர், 25 மீட்டராக குறைக்கப்பட்டது. ஒரே ஆண்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தான் நிர்ணயித்த தூரத்தை 10 சதவிகிதமாக குறைத்த விஷயத்திலேயே மிகப்பெரிய முரண் இருக்கிறது. ஆனால், அதைக்கூட ஸ்டெர்லைட் செய்யவில்லை. பசுமை அரண் நிலம் குறைந்திருப்பது, ஸ்டெர்லைட்டால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை அதிகப்படுத்தும். 

நிலம்

ஸ்டெர்லைட்டிடம் இருக்கும் நிலம் 102.31 ஹெக்டேர்தான்

திரவக் கழிவுகள் வெளியேறவில்லை என்பது பொய்! 

எந்தத் திரவக் கழிவுகளும் வெளியேறுவதில்லை என்பதும் பொய்யான தகவல். 2011-ம் ஆண்டு வெளியான நீரி (NEERI) அறிக்கை, 2012-ம் ஆண்டு வெளியான மத்திய மாசுக் கட்டுப்பாட்டு அறிக்கை, 2017-ம் ஆண்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை ஆகியவை ஸ்டெர்லைட் ஆலை மறுசுழற்சி செய்யும் கட்டமைப்பு அரைகுறையாகச் செயல்படுகிறது என்று சொல்லியிருக்கிறது. கனமழையின்போது, ஆலையின் வளாகத்துக்குள் விழும் நீரைச் சேமித்து வைக்கும் நிலம் கூட நிறுவனத்திடம் இல்லை. 

புகைபோக்கி உயரம் குறைவால் நிச்சயம் பாதிப்பு! 

புகைபோக்கி மூலமாகக் குறைவான சல்பரைத்தான் வெளியேற்றுகிறோம், அதனால் இப்போதுள்ள புகைபோக்கியின் அளவு போதுமானது நித்யானந்த் ஜெயராமன்என்று சொல்கிறார்கள். ஐ.ஐ.டியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சுவாமிநாதன் கூற்றுப்படி, 'ஸ்டெர்லைட் உருக்கு ஆலையின் புகைபோக்கி அரசு விதிகளின்படி, 102.8 மீட்டர் உயரம் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதோ 60 மீட்டர்தான். சல்பியூரிக் அமில உற்பத்தி ஆலையின் புகைக்குழாயின் உயரம் 83.5 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால், அதுவும் 60 மீட்டர் உயரம் மட்டும்தான் உள்ளது. புதிதாக ஆலைக் கட்ட அனுமதி வாங்கி இருக்கும் இடத்தில் புகைக்குழாயின் உயரம் 165 மீட்டர் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் குறிப்பிடுகிறது. பழைய ஆலை போன்று அதே திறன் கொண்ட புதிய ஆலைக்கு மட்டும் ஏன் 165 மீட்டர் என்று குறிப்பிட வேண்டும்' என்று குறிப்பிடுகிறார். இங்குதான் முரண்களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். குறைவான உயரமுள்ள புகைக்குழாயில் வெளியேறும் சல்பர் டை ஆக்சைடின் அளவு பாதுகாப்பானது அல்ல. மக்களுக்குப் பல தீமைகளை ஏற்படுத்திவிடும். 

தரம் குறைவான மூலப்பொருள் இறக்குமதி!

ஸ்டெர்லைட் இறக்குமதி செய்யும் அடர் தாமிர தாதுமூலப் பொருளில் ஆர்சனிக், காரீயம், பிஸ்மத், ஆண்டிமனி, யுரேனியம் உள்ளிட்டவை அதிகமாக இருக்கின்றன. இந்த நச்சுப் பொருள்களால் புற்றுநோய் ஏற்படும் பாதிப்புகளும், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. 

ஆய்வு

அபாயகரமான ஆர்சனிக்!

ஸ்டெர்லைட் அளிக்கும் ஆய்வுகளை வைத்துக் கணக்கிட்டால், மொத்தமாக உபயோகப்படுத்தப்படும் ஆர்சனிக் அளவானது முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. பயன்படுத்தப்பட்ட பின்னர் மீதம் உள்ள ஆர்சனிக் அளவைக் கணக்கிட்டால் 7.75 டன் கணக்கில் வரவில்லை. இது முழுமையாகக் காற்று மூலமாகவோ, நீர் மூலமாகவோ வெளியேற்றப்படுகிறது. இவ்வளவும் வெளியேற்றப்பட்டால் நிச்சயமாக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். 

உடல் நிலை பற்றிய ஆய்வு!

2011-ம் ஆண்டு 6 மாதத்துக்கு ஒருமுறை அருகில் உள்ள கிராமங்களில் சுகாதாரக் கண்காணிப்பு ஆய்வுகளை ஸ்டெர்லைட் ஆலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை ஸ்டெர்லைட் ஆலைச் செயல்படுத்தவில்லை. ஸ்டெர்லைட் வழக்கு ஒன்றில் பசுமைத் தீர்ப்பாயம் ஓர் உத்தரவு கொடுத்திருந்தது. அதில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ம.தி.மு.க தலைவர் வைகோவை வைத்துக் கொண்டு சுகாதார கண்காணிப்பு ஆய்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இப்போது ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் சொல்லப்பட்ட தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் சொன்னதாக சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய இரண்டுமே தங்கள் வேலையைச் செய்யவில்லை.  இருவருமே தங்கள் கடைமையைச் செய்யத் தவறி இருக்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆய்வு

ஆய்வுகள் நடத்தப்பட்ட இடம்

மாசுக்கட்டுப்பாட்டு ஆய்வு அறிக்கை

புற்றுநோய் பற்றிய கணக்கு!

மாவட்ட அளவிலான புள்ளி விவரங்களைக் கணக்குக்காட்டி, தூத்துக்குடியில் புற்றுநோயே இல்லை எனச் சாதிக்கப்பார்க்கிறது. குறிப்பிட்ட சில கிராமங்களில் புற்றுநோய் இல்லை என்பதற்கு மாவட்ட அளவிலான புள்ளி விவரங்கள் போதாது. ஒரு மாவட்டத்தில் 10 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது பெரிய விஷயம் கிடையாதுதான். ஆனால், பாதிக்கப்பட்ட 10 பேரில் 7 பேர் ஒரு கிராமத்தில் இருந்தால் அது கவனத்தில் கொள்வது அவசியமாகிறது. மக்களின் ஆரோக்கியம் பற்றிய ஆய்வுகளை முழுமையாக நடத்தியிருந்தால் கிராமப் புள்ளி விவரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். 

நிலத்தடி நீர் மாசுபாடு!

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரை ஆய்வு செய்தது. அதில் அனுமதிக்கும் அளவைவிட 11 முதல் 55 மடங்கு அதிகமான காரீயம் (lead) இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கும் ஆலையின் தரப்பில் சரியான பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்