"வீட்டுவேலை செய்றவங்கன்னா அவ்ளோ ஏளனமா?" அரசு நிர்ணயித்த ஊதியம் நியாயமானதா? | Government fixes a salary for housemaids

வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (06/08/2018)

கடைசி தொடர்பு:11:04 (06/08/2018)

"வீட்டுவேலை செய்றவங்கன்னா அவ்ளோ ஏளனமா?" அரசு நிர்ணயித்த ஊதியம் நியாயமானதா?

செய்கிற வேலைக்கு ஏற்ற அங்கீகாரம், சக மனிதனாக நடத்த வேண்டுமென்கிற மரியாதை இதைத்தாண்டி ஒரு பணியாளர் எதிர்பார்ப்பது வேறு ஏதும் இருக்காது.

டந்த பத்தாண்டுகளில் முதல்முறையாக வீட்டு வேலை செய்பவர்களுக்கான ஊதியத்தை அரசு நிர்ணயித்துள்ளது. பணியாளர்கள் செய்யக்கூடிய வேலை, அவர்களின் இருப்பிடம் ஆகியவற்றை கணக்கில்கொண்டு இதை வரையறை செய்திருக்கிறார்கள். 

அதற்கான வரைபடத்தை இங்கே பார்ப்போம்.

வீட்டு வேலை செய்பவர்கள் சம்பளம்

தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் தலைமையிலான குழு கொடுத்த ஆய்வின் அடிப்படையில் அரசு இந்த குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்துள்ளது. அரசுத் தரப்பு, முதலாளித்தரப்பு, தொழிலாளர் நல சங்கத் தரப்பு என இந்தக் குழு, முத்தரப்புகளால் ஆனது. இதில் தொழிலாளர் நலத்தரப்பில் பங்கெடுத்த லதா பாக்கியம் தனக்கு இந்த ஊதிய நிர்ணயத்தில் திருப்தி இல்லை எனத் தெரிவித்து இருக்கிறார். இந்திய தொழிற்சங்க மைய துணைத்தலைவராகவும் செயல்பட்டு வரும் அவரிடம் பேசினேன்...

"வீட்டுவேலை செய்யுறவங்களுக்கு, குறைந்தபட்சம் ஊதியம் என அரசு உறுதி செய்திருப்பது நல்ல விஷயம். ஏன்னா பல வருஷமா இதை ஒரு தொழிலாகவே அவங்க நினைக்கல. இதுல நேரடி உற்பத்தி இல்ல. அதனால இவங்க உழைப்பை கணக்கில் எடுத்துக்காம அரசாங்கம் இருந்தது. 69 தொழில்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்து பல வருஷங்கள் கழித்து எழுபதாவதா வீட்டுப் பணியாளர்களுக்கு செஞ்சிருக்காங்க. 1998ல் முறைப்படுத்தப்படாத பணிகளைப் பட்டியலிட்டாங்க. அதுல வீட்டு வேலை செய்யுறவங்களை கணக்கில் எடுத்துக்கலை. 'ஏன்'னு அப்போ நாங்க கேட்டதுக்கு "இவங்கள எல்லாம் முறைப்படுத்தினா, சங்கம், ஊதிய உயர்வு அது, இதுனு கேட்டு வேலைக்கு வர்றத நிறுத்திடுவாங்க. எங்க வீட்டுத் துணிமணி, பாத்திரம் பண்டம்லாம் நாறுமே"ன்னு ரொம்ப கேலியா எங்கிட்ட ஒரு அதிகாரி சொல்லிச் சிரிச்சது இன்னும் ஞாபகம் இருக்கு. வீட்டு வேலை செய்றவங்கன்னா அவ்ளோ ஏளனமா? எப்படியோ இன்னைக்கு குறைந்தபட்ச ஊதியம் உறுதி ஆகி இருக்கு. ஒருபக்கம் மகிழ்ச்சியா இருந்தாலும், இது நியாயமானதாக இல்லை. 

அரசாங்கம் நிர்ணயம் செய்திருக்கிற இந்தக் குறைந்தபட்ச ஊதியம் 2016ல் உள்ள விலைவாசியைக் கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்கு. தமிழ்நாட்டில் இருக்கிற ஐந்து மண்டலங்களில் இருக்கும் வீட்டுப் பணியாளர்கள் மற்றும் அவங்களோட முதலாளிகள் என நிறைய பேரிடம் ஆய்வு செஞ்சுதான் இந்த அறிக்கையைக் கொடுத்தோம். சமையல் செய்வது, வீட்டிலுள்ள வயசானவங்களைப் பார்த்துக் கொள்வது திறன்மிகு வேலையாகவும், துணி துவைப்பது, ஓரளவு திறனுள்ள வேலையாகவும், பாத்திரம் தேய்ப்பது குறைந்த திறனுள்ள வேலையாகவும் தீர்மானித்து அதனடிப்படையில் சம்பளத்தை தீர்மானம் செஞ்சிருக்காங்க. இன்னைக்கு இருக்கிற விலைவாசியோட இவங்களுக்கு உறுதி செய்திருக்கிற சம்பளத்தை மனசாட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதுல இருக்கிற அநியாயம் புரியும். 'கேரளாவுல எந்தவிதமான வேலை செஞ்சாலும் ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் அறுநூறு ரூபாய் ஊதியமாக கொடுக்கணும்'னு பினராயி விஜயன் சட்டம் கொண்டு வந்து இருக்காரு. நான், கேரளாவோட இதை ஒப்பிடல. ஆனா, இந்தக் கூலி ரொம்ப ரொம்ப குறைவு. 

வீட்டு வேலை

வீட்டுவேலை செய்யுறவங்க, எவ்வளவு மோசமா நடத்தப்படுறாங்க, எளிதில் திருட்டுப் பழிக்கு உள்ளாக்குறாங்க, அது மட்டுமில்லாம எவ்வளவு மோசமான உடல்சூழல்ல அவங்க வேலை செய்யுறாங்கன்னு அங்க இருந்து பார்த்தாதான் அவங்களோட வலி புரியும். நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாது. இருபது, முப்பது வருஷமா வேலை செய்த வீடுகள்ல இருந்து சாதாரணமா அவங்க வெளியே அனுப்பப்படுறாங்க. வேலை காப்புறுதிங்கிறதே இவங்களுக்கு இல்ல. 'தொழில் தகராறு' சட்டத்துல இவங்களை அரசாங்கம் இணைக்கணும். இப்போ அரசாங்கம் சொல்லியிருக்கிற ஊதியத்தை அமல்படுத்த வழி என்ன? முறைகேடு நடந்தா எங்கே புகார் அளிக்கிறது?." என்றார் லதா. 

இந்த விஷயத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியவை ஒருபுறம் இருக்கட்டும். பணியாளர்களை மரியாதையுடன் நடத்துவதுதான் அடிப்படையில் முக்கியம் எனக் கருதுகிறேன். காரணம், இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத அதே சமயம் பணியாளர்களுக்குக் கிடைத்தாக வேண்டிய ஒன்றும்கூட. அவர்கள் உழைப்பைக் கொடுக்கிறார்கள் நாம் ஊதியத்தைக் கொடுக்கிறோம். இந்த கொடுக்கல் வாங்கல் நாகரீகமாக நடக்கவேண்டும்தானே? இன்று எத்தனையோ வீடுகளில் பணியாளர்கள் பலவகையில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள் என்பதைச் செய்திகளின் வழியாக அறியவரும்போது கனத்த மனதுடன் அதைக் கடந்துபோக வேண்டியிருக்கிறது. குறிப்பாக, சிறுவர் சிறுமியர் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகிறார்கள்.

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வேலைக்காக வந்து ஊர் திரும்பிய ஒரு சிறுமியிடம் பேசியபோது " 'எழுந்துக்கவே முடியாத ஒரு பெரியவர் இருக்காரு. ரொம்ப வயசானவரு. அவரை எழுப்பிவிட, சாப்பாடு கொடுக்க, உதவியா இருக்க ஆளு வேணும்'னு கேட்டாங்க. எங்க வீட்ல என்னை அனுப்பி வெச்சாங்க. ஒரு வாரத்துல சென்னையில இருந்து தப்பிச்சு ஊருக்கு வந்துட்டேன்" என்ற சிறுமி சிலநொடிகள் அமைதியாக இருந்துவிட்டு "அந்த தாத்தா எங்கெங்கயோ தடவுனாரு" என்று அழ ஆரம்பித்தாள். இப்படி எத்தனையோ கதைகள் வெளியே வராமல் இயலாமையின் பொருட்டு அழுகையின் வழியாக கரைக்கப்படுகின்றன.

நம் வீட்டுக்கு ஒருவர் வேலை செய்ய வந்திருக்கிறார் என்பதாலேயே அவர் மட்டமாக நடத்துவதற்குத் தகுதி வாய்ந்தவர் என ஆகிவிடாது. நம் நிறுவனத்திற்கு இவர் வேலைக்கு வருகிறார் என நிர்வாகம் நம்மைத் தரக்குறைவாக நடத்தினால் அதை ஏற்றுக் கொள்வோமா என்ன? கொஞ்சம் மரியாதைக் குறைவு ஏற்பட்டால்கூட அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் புலம்புகிறோம். ஒருகட்டத்தில் வேலையையே விட்டுச் செல்கிறோம். குடும்ப வறுமையின் காரணமாக அடுத்த வீட்டுக்கு வேலைக்கு வருகிறார்களே, அவர்களின் மனநிலையில் இருந்து பார்க்கிறபோதுதான் அது எத்தனைப் பலவீனமான நிலை என்பது நமக்குப் புரிய வரும். வேலைக்கேற்ற ஊதியம் கொடுக்கப்பட்டாலும் தினமும் இவர்களுக்கு ஏற்படுகிற மனஉளைச்சல்களுக்கு இழப்பீடாக என்ன கொடுத்துவிட முடியும்.

செய்கிற வேலைக்கு ஏற்ற அங்கீகாரம், சக மனிதனாக நடத்த வேண்டும் என்கிற மரியாதை, இதைத்தாண்டி ஒரு பணியாளர் எதிர்பார்ப்பது வேறு ஏதும் இருக்காது. இது எல்லாவகையான வேலைகளுக்கும் பொருந்தக்கூடிய உலக நியதி. இதை நாம் நிறைவேற்றுவதற்குத் தேவையானது ஒன்றே ஒன்றுதான் அதன்பெயர் மனிதநேயம்.


டிரெண்டிங் @ விகடன்