வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (06/08/2018)

கடைசி தொடர்பு:12:35 (06/08/2018)

அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்! எஸ்.பி.யை எச்சரிக்கும் ஆம்ஆத்மி

அ.தி.மு.க அமைச்சர் நடத்திய சைக்கிள் பேரணியில் கலந்துகொள்ள தொண்டர்களை சரக்கு லாரியில் ஏற்றி வந்தது குறித்து பிரச்னையை கிளப்பியிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் திருஞானம்.

வாகனங்களில் அழைத்துச் செல்லும் அதிமுகவினர்


இது குறித்து அவர் பேசும்போது, ``சரக்கு வாகனங்களில் சரக்குகளை மட்டுமே ஏற்ற வேண்டும், ஆட்களை அதில் ஏற்றிச் செல்லக் கூடாது. அப்படி ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய அல்லது வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபடும்போது அவசரநிலையில் ஆட்களை ஏற்றிவரும் வாகனங்களைப் பிடித்து வழக்கு பதிவு செய்வது ஓட்டுநர் லைசென்ஸ் ரத்து பண்ணுவதும், இடைக்கால ரத்தும் செய்து வருகிறார்கள். இந்தச் சட்டம் சாமானிய மக்களுக்கு மட்டும் பாய்கிறது.

தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கும் அ.தி.மு.க அரசின் வருவாய்த் துறை அமைச்சர் அம்மா பேரவையின் சார்பில் இந்த அரசின் சாதனையை விளக்குவதற்கு சைக்கிள் பேரணியை தேவகோட்டையிலிருந்து தொடங்கி காரைக்குடி வழியாக வரும்போது பத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் கட்சித் தொண்டர்களை ஏற்றிக்கொண்டு கோஷம் போட்டுக்கொண்டு போகிறார்கள். அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்புக் கொடுக்கிறார்கள். நான் கேட்பது போக்குவரத்துப் போலீஸார் என்ன செய்தீர்கள். ஏன் அந்த வாகனங்கள் மீதும் அதில் பயணம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. இதற்கு விளக்கம் கேட்டு சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்திருக்கிறேன். அமைச்சர்கள் உதயகுமார், பாஸ்கரன் மற்றும் எம்.பி செந்தில்நாதன் ஆகியோர் மீது எஸ்.பி, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றம் செல்லத் தயாராக இருக்கிறேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நான் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதற்காக வழக்கு போட்ட போலீஸ் இப்போது எங்கே போனது. அதுதான் என் கேள்வி? ஆளும் கட்சியென்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என்பதை அதிகாரிகள் விளக்க வேண்டும்'' என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க