`மதுரை மாநகராட்சி செலவு கணக்கை மறு தணிக்கை செய்யணும்' - கலெக்டரிடம் புகார்

மதுரை மாநகராட்சியில் கடந்தாண்டில் நிர்வாகச் செலவுக்கு மட்டும் பல கோடி ரூபாய் செலவழித்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளதை, மறு தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு மக்கள் விழிப்பு உணர்வு அறக்கட்டளையினர் இன்று கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளார்கள்.

மக்கள் விழிப்பு உணர்வு அறக்கட்டளையினர்

இவர்கள் பெற்றுள்ள விவரங்களைப் பார்க்கும்போது மக்கள் வரிப்பணத்தை மாநகராட்சி அதிகாரிகள் எப்படியெல்லாம் செலவு செய்கிறார்கள் என்பதைப் பார்த்து அதிர்ச்சியாக உள்ளது. இதுபற்றி நம்மிடம் பேசிய தகவல் அறியும் உரிமைசட்ட பயிற்றுநர் நெல்பேட்டை ஹக்கீம், ``மக்களிடம் குடிநீருக்காகவும், கழிவு நீர் அகற்றவும் வரி வசூல் செய்வதில் கடுமை காட்டும் மாநகராட்சி நிர்வாகம், அந்த வருவாயை எப்படியெல்லாம் நிர்வாகச் செலவு என்ற பெயரில் கணக்கு காட்டுகிறார்கள் என்பதை, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அவர்களே வெளியிட்டுள்ளார்கள்.  இப்படி வெளியிட்டதற்கு அவர்களைப் பாராட்டும் அதே வேளையில், அதில் காட்டியுள்ள செலவினங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.

2014-2015 ஆண்டில் செலவு 300,81,93,923 கோடி ரூபாயாகவும், 2015-2016 நிதி ஆண்டில் செலவு 301,51,88,233  கோடி ரூபாயாகவும்,  2016-2017   நிதி ஆண்டில் செலவு 308,74,15,882 கோடி ரூபாய் என கடந்த மூன்று ஆண்டுகளில் 911,07,98,038 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த செலவினங்களுக்காக அவர்கள் காட்டியிருக்கும் கணக்குகள் அதிகப்படியாக உள்ளன. உதாரணத்துக்கு கடந்த ஆண்டு மட்டும் மாநகராட்சி ஊழியர்களின் மருத்துவச் செலவுகளுக்கு 35,65,405 ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களின் வேறு செலவினங்களில் 16,27,339 ரூபாயும், பயணம் மற்றும் சீருடைக்கு 36,27,339 ரூபாயும் எனப் பல செலவுகளை அதிகமாக காட்டியுள்ளார்கள். கணக்குகளிலும் முரண்பாடுகள் உள்ளன. எனவே, மாநகராட்சி வரவு- செலவுகளை மறு தணிக்கை செய்ய வேண்டுமென்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!