`அக்கா கஷ்டப்பட்டு படிக்கவைத்தார். ஆனால்...' - 4 கொலை வழக்கில் சிக்கிய ரவுடி கதிர் உருக்கம்!

பிரபல ரவுடி கதிர்

`அக்கா கஷ்டப்பட்டு படிக்கவைத்தும் பத்தாம் வகுப்பு பெயிலானதால், என் வாழ்க்கை திசை மாறிவிட்டது' என்று பிரபல ரவுடியான கதிர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தலைமறைவு ரவுடிகளைக் கைதுசெய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில், புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரன் தேஜாஸ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த கதிர் என்கிற கதிர்வேலை கடந்த சில தினங்களுக்கு முன்பு செம்பியம் உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையிலான இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு,  சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அப்போது, போலீஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்ற கதிர்வேலின் கால் உடைந்தது. அதன்பிறகு, சிகிச்சை அளிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கதிர்வேல், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கதிர்வேலின் ஃப்ளாஷ்பேக் கதையை போலீஸார் கூறுகையில், கதிர் என்ற கதிர்வேல், 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
அவரின் அப்பா, அம்மா இறந்த பிறகு,  சகோதரி ஒருவர் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைபார்த்துக்கொண்டே அவரைப் படிக்கவைத்தார். ஆனால், பத்தாம் வகுப்பில் கதிர்வேல் பெயிலாகிவிட்டார். அதன்பிறகும் அவரைப் படிக்கவைக்க சகோதரி விரும்பினார். ஆனால், அவர் படிக்காமல் டிஜிட்டல் பிரின்டிங் வேலைக்குச் சென்றார். கதிர்வேலின் தம்பியை அவரின் சகோதரி படிக்கவைத்தார். 

வேலைக்குச் சென்ற கதிர்வேலின் பாதை திசைமாறியது. ஆரம்பத்தில் அடிதடி வழக்குகளில் சிக்கிய அவர், கூலிப்படைத் தலைவனாக மாறினார். 2010-ல் கோபிநாத் என்பவரைக் கொலை செய்தார். அடுத்து, மாதவரத்தைச் சேர்ந்த தாமோதரன், கொடுங்கையூரைச் சேர்ந்த ரூபன், செம்பியத்தைச் சேர்ந்த மணிரத்னம் என நான்கு கொலை வழக்குகள் கதிர்வேல் மீது பதிவாகின. அதோடு, கொலை முயற்சி உள்ளிட்ட சில வழக்குகளும் அவர்மீது உள்ளன. நான்குமுறை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

கூலிப்படைத் தலைவனான கதிர்வேலுக்கும் ரெட்டேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி  அப்பு என்கிற தினேஷுக்கும் நீண்ட காலமாகப் பகை இருந்துவந்தது. இதனால், இருதரப்புகளைச் சேர்ந்தவர்கள் மோதிக் கொண்டனர். இந்தச் சமயத்தில்தான் குண்டாஸிலிருந்து வெளிவந்த கதிர்வேலைக் கைதுசெய்துள்ளோம்'' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!